விழுப்புரத்தில் அதிர்ச்சி ... தரமற்ற குடிநீர் தயாரித்த 16 நிறுவனங்கள் மீது வழக்கு! குடிநீர் தரம் குறித்த அதிர்ச்சி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் சத்துக் குறைவான, தரமற்ற குடிநீர் பாட்டில்களை தயாரித்த 16 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சத்துக் குறைவான, தரமற்ற குடிநீர் பாட்டில்களை தயாரித்த 16 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு, அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பாட்டில் உற்பத்தி மற்றும் தண்ணீரின் தரம் குறித்த புதிய விதிமுறைகள்
விழுப்புரத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட குடிநீர் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குடிநீர் பாட்டில் உற்பத்தி மற்றும் தண்ணீரின் தரம் குறித்து தமிழ்நாடு அரசு வகுத்துள்ள புதிய விதிமுறைகள் குறித்தும், விதிமுறைகள் மீறும் பட்சத்தில் அதற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அரசின் விதிமுறைகளை நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன்..
தரமற்ற குடிநீர் பாட்டில்களை தயாரித்த 16 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் 75 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 42 நிறுவனங்களிலிருந்து தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 16 நிறுவனங்களில் குடிநீர் தர மற்றவை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இவற்றில் கால்சியம், மெக்னீசியம் ஆகியவை குறைவாக உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும், நிறுவனங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பாட்டில்களின் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை வைத்திருக்க.
கால்சியம் சத்து குறைவாக உள்ள 16 தண்ணீர் நிறுவனங்களின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பணம் பெறுவதாக புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கிய இரண்டு நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது. இதனை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





















