Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது உத்தரகாசி. அந்த மாநிலத்தின் மிகவும் முக்கியமான நகரங்களில் இதுவும் ஒன்று. இங்கு கங்கை நதி பாய்ந்து வருகிறது. உத்தரகாசியில் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கீர் கங்கை நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு உண்டானது.
காட்டாற்று வெள்ளம்:
காட்டாற்று வேகத்தில் வந்த வெள்ளம் உத்தரகாசியில் உள்ள தாராலி கிராமத்தை முழுவதும் சூறையாடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த இந்த காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு பல அடி உயரத்திற்கு பாய்ந்தது. மலையின் மேலே இருந்து கீழே நதியில் பாய்வதற்காக மின்னல் வேகத்தில் இந்த காட்டாற்று வெள்ளம் பல அடி உயரத்திற்கு பாய்ந்து வந்தது.
100 பேர் மாயம்:
இதனால், கரையோரத்தில் இருந்த வீடுகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ளத்தை கண்டு பலரும் பயந்து பீதியில் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவல்படி 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
उत्तरकाशी में बादल फटने से भारी तबाही मची है... एक दर्जन से ज्यादा लोगों के मलबे में दबने की सूचना है
— Vinay Saxena (@vinaysaxenaj) August 5, 2025
भयावह मंजर है- वीडियो 👇#uttarkashicloudburst #uttarkashi #UttarakhandNews #cloudburst pic.twitter.com/BcQmADqLlk
இந்த கோரமான இயற்கை பேரிடரில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த மாநில காவல்துறை, தீயணைப்புத்துறையினர் நேரில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு பணிகள் தீவிரம்:
இந்த மிகப்பெரிய காட்டாற்று வெள்ளத்தால் ஒட்டுமொத்த தாராலி கிராமமும் சிதைந்துள்ளது. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உண்டான பாதிப்பிற்கு நிகராக இங்கும் பாதிப்பு உண்டாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மீட்பு பணியில் ஈடுபட உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நதியின் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த சிறு வீடுகள், உணவகங்கள், விடுதிகள் ஆகியவையே பெரும்பாலும் இந்த காட்டாற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமியிடம் தொலைபேசியில் பேசி விசாரித்தார். மேகவெடிப்பால் திடீரென உருவாகிய இந்த காட்டாற்று வெள்ளத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 40 முதல் 50 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.





















