Shahid Afridi on Taliban: தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த ஷாகித் அப்ரிடி - குவியும் கண்டனங்கள்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்கள் அந்த நாட்டை கைப்பற்றியது முதல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த வேதனை கொண்டுள்ளனர். தலிபான்கள் ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது அந்த நாட்டில் மிக கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக, பெண்கள் கல்வி கற்பதற்கும், வேலைக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகே பெண்கள் கல்விக்கும், வேலைக்கு செல்வதற்கும் அந்த நாட்டில் அனுமதி அளிக்கப்பட்டது. மீண்டும் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதால், அச்சத்தின் காரணமாகவே அந்த நாட்டு மக்கள் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
Taliban are cricket lover : Shahid Afridi pic.twitter.com/BPb8lb7jNF
— Shoaib Jatt (@Shoaib_Jatt) August 30, 2021
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஷாகித் அப்ரிடி ஆப்கான் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அந்த நாட்டு ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தலிபான்களை கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை அவர்கள் நேர்மையாக இருப்பது போல தெரிகிறது. அவர்கள் பெண்களை வேலைக்கு செல்ல அனுமதித்துள்ளனர். அரசியலிலும் அனுமதித்துள்ளனர். தலிபான்கள் கிரிக்கெட்டை நேசிக்கின்றனர். அவர்கள் கிரிக்கெட்டிற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தலிபான்களின் ஆட்சி முறைக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், ஷாகித் அப்ரிடியின் இந்த கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பலரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கண்டனங்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
தலிபான்கள் கிரிக்கெட்டை நேசிப்பதாகவும், அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அஃப்ரிடி தனது பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், ஆப்கான் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பலரும், விளையாட்டு வீரர்களும் தலிபான்கள் நாட்டை கைப்பற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தலிபான்களால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அச்சப்பட்டு பலரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அப்ரிடியின் இந்த கருத்தைத் தொடர்ந்து, முன்பு ஒருமுறை பெண்கள் கிரிக்கெட் பற்றி அப்ரிடி ஏளனமாக பேசிய வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்கு செல்வதற்கு அனுமதி என்று தலிபான்கள் கூறியிருந்தாலும், பெண்கள் கல்வி மற்றும் வேலை குறித்து அவர்களது மதகுருமார்களே முடிவு செய்வார்கள் என்று அறிவித்திருந்தனர்.
மேலும், பணியிடங்களுக்கு சென்ற பெண்களை தலிபான்கள் பணிக்கு செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இனிமேல் இசைக் கச்சேரியே இருக்கக்கூடாது என்று இசைக்கலைஞரை சுட்டுக்கொன்றுள்ளனர். தலிபான்களை இன்னும் உலக நாடுகள் பலவும் அங்கீகரிக்காத சூழலில், அப்ரிடி இவ்வாறு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.