USA India: ”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு
USA India: இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை என, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

USA India: அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் விதமாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
”உறவில் மாற்றம் இல்லை”
அண்மையில் அமெரிக்க பயணத்தின் போது பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர், ”தங்களது இருப்பிற்கு ஏதேனும் பிரச்னை வந்தால் இந்தியா மற்றும் பாதி உலகத்தை அணு ஆயுதங்களை கொண்டு அழித்துவிட்டே வீழ்வோம்” என பேசியதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் இருந்தபடியே, முனிர் இப்படி மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவில் எந்த மாற்றமும் இல்லை என, அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
”நாங்க மட்டும் இல்லைன்னே.. பேரழிவை தடுத்தோம்”
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில், “இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்னை ஏற்பட்டால் அது மோசமான நிகழ்வாக மாறும் என்பது தொடர்பான விவகாரத்தில் எங்களுக்கு அனுபவம் உள்ளது. அதன் காரணமாகவே அண்மையில் இருநாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டபோது துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அதிபர் ட்ரம்ப் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் உடனடியாக அக்கறையுடன் செயல்பட்டு தலையிட்டனர். தொலைபேசி அழைப்புகள் மூலம் பேசி இருதரப்பையும் ஒருங்கிணைத்து அமைதியை ஏற்படுத்தினோம். அமைச்சர் ரூபியோ, துணை அதிபர் வான்ஸ் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்டத் தலைவர்கள் இந்த சாத்தியமான பேரழிவைத் தடுப்பதில் ஈடுபட்டது மிகவும் பெருமையான தருணம்” என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் டாமி ப்ரூஸ் விளக்கமளித்தார்.
”வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா”
மேலும், ”இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வகையான தீவிரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்து போராட அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இணைந்து உறுதிபூண்டுள்ளது. இருநாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை எதிர்ப்பது தொடர்பாகவும் விவாதித்துள்ளோம். பிராந்தியத்திற்கும், இந்த உலகிற்கும், அமெரிக்கா அந்த இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவது ஒரு நல்ல செய்தி, மேலும் அது நன்மை பயக்கும் எதிர்காலத்தை ஊக்குவிக்கும்” என டாமி ப்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பகைக்கிறதா அமெரிக்கா?
சக நட்பு நாடான இந்தியாவிற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அணு ஆயுத மிரட்டல் விடுத்தது தொடர்பாக அமெரிக்கா சார்பில் ஒரு கண்டனம் கூட தற்போது வரை தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக ட்ரம்பே அண்மையில் கூட கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால், பரஸ்பர வரி மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவகாரங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ட்ரம்பின் நிர்வாகம் இந்தியாவிற்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக குறிப்பிட்டு இந்தியாவிற்கு 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது. சர்வதேச நாடுகளில் எங்கும் போர் நடக்கவே கூடாது என்பது தனது கொள்கை என ட்ரம்ப் பேசி வருகையில், அவரது நாட்டில் இருந்தே இந்தியாவிற்கு அணு ஆயுத மிரட்டல் விடும் அளவிற்கு பாகிஸ்தானிற்கு எப்படி தைரியம் வந்தது? என்பது குறித்து தற்போது வரை பேசவில்லை. ஆனால், அண்மைக்காலமாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் முற்றிலுமாக இந்தியாவிற்கு எதிராகவே இருப்பது, இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது.





















