திமுக-வில் இணைந்தார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
அதிமுக முன்னாள் எம்பி-யான மைத்ரேயன் இன்று அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார்.

அதிமுக-வின் முன்னாள் எம்பியாக பொறுப்பு வகித்தவர் மைத்ரேயன். இவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக-வில் ஏற்பட்ட தலைமை மோதலில் ஓரங்கட்டப்பட்டார். பின்னர், அவர் பாஜக-வில் இணைந்தார்.
திமுக-வில் இணைகிறார் மைத்ரேயன்:
பாஜக-வில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கட்சியில் மைத்ரேயன் இணைந்தார். ஆனால், அவருக்கு அங்கு எதிர்பார்த்த அளவு பொறுப்புகளோ, பதவியோ கிடைக்கவில்லை. இதனால், பாஜக மீது அதிருப்தி அடைந்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தார்.
இந்த சூழலில், அதிமுக-வில் இருந்து விலகி இன்று மைத்ரேயன் திமுகவில் இணைகிறார். இது அதிமுக-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக-வின் முன்னாள் எம்பியான அன்வர் ராஜா அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். தற்போது மற்றொரு முன்னாள் எம்பி-யும் திமுக-வில் இணைய இருப்பது அதிமுக-விற்கு பின்னடைவாக உள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் வாசுதேவன் - மங்கா வாசுதேவனுக்கு பிறந்தவர் மைத்ரேயன். 1955ம் ஆண்டு பிறந்த இவர் அடிப்படையில் ஒரு மருத்துவர் ஆவார். நாக்பூரில் மருத்துவ படிப்பு முடித்தவர் சென்னையில் முதுகலை மருத்துவம் படித்துள்ளார்.
பாஜக டூ அதிமுக:
சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ்-ல் ஈடுபாடு கொண்டிருந்த 1991ல் தன்னை பாஜக-வில் இணைத்துக் கொண்டார். தமிழக பாஜக-வின் பொதுச்செயலாளராக 1995 முதல் 97 வரை பணியாற்றிய இவர், பின்னர் பாஜக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.
மூப்பனார் மறைவால் ஏற்பட்ட ராஜ்யசபா இடைக்கால உறுப்பினர் பதவியை இவருக்கு ஜெயலலிதா வழங்கினார். பின்னர், ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று 2007 மற்றும் 2013ம் ஆண்டில் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட மோதலில் இவருக்கு போதியளவு அதிமுக-வில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இவரது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தர மறுத்தது.
அதிமுக டூ திமுக:
இதையடுத்து, இவர் 2023ம் ஆண்டு அதிமுக-வில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தார். ஆனால், அங்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாத சூழலில் கடந்தாண்டு பாஜக-வில் இருந்து விலகி மீண்டும் அதிமுக-வில் இணைந்தார்.
இந்த சூழலில், அவர் தற்போது அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைகிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 26 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக -திமுக-வுடன் கூட்டணி வைக்கிறது என்ற காரணத்திற்காக தமிழக பாஜக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைவதாக அறிவித்தார். தற்போது திமுக-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையி்ல், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியிலும் கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள், நிர்வாகிகளை தக்கவைத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக-விற்காக இதுவரை வலுவான கூட்டணியை அமைக்காமல் உள்ளார். அவர் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சி பக்கம் தாவி வருவது அதிமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.





















