Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ஏய் நிறுத்துடா... இதுக்கு தான் வந்தியா என பத்திரிகையாளர்களை கடலூர் திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வில்வநகர் பகுதியில் நியாய விலை கடை பல ஆண்டுகளுக்கு முன்பு பாழான நிலையில் புதிய நியாய விலை கட்டிடம் கேட்டு பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்காலிகமாக வில்வநகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொது மேம்பாட்டு நிதியிலிருந்து கடலூர் வில்வநகர் பகுதிக்கு நியாய விலை கட்டிடம் கட்டித் தருவதாக கூறி வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நியாய விலை கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பொது என்று இல்லாமல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நியாய விலை கடை என தெரிவிக்கப்பட்டதால் வில்வநகர் பகுதியை சேர்ந்த "பட்டியல் சமுதாய மக்கள் அதிகம் உள்ள பகுதிக்கு சொந்த கட்டிடம் கேட்டு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பகுதிநேர நியாய விலை கடைக்கு சொந்த கட்டிடம் என்பது முறையா? என கடலூர் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர். அப்போது கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் இதனை வீடியோ எடுத்த செய்தியாளர்களை நிறுத்துடா என்று ஒருமையில் பேசினார்.
மேலும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தரப்பினருக்கும், வில்வநகர் பகுதி நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் சரிதா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் பிரதிநிதியான எம்எல்ஏ -விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை எம்எல்ஏ ஒருமையில் பேசிய சம்பவம் அங்கு சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் "காலணியை கோப்புகளில் இருந்து அகற்ற வேண்டுமென பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். ஆனால் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் உள்ள சாதிய பாகுபாடுகளை கலைவது எப்போது? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




















