சமரசம் ஆவாரா ஓ.பன்னீர்செல்வம்? இ்ன்று மீட்டிங்.. டெல்லியில் இருந்த வந்த பாஜக நிர்வாகி
பாஜக கூட்டணியின் உள்ளே ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கொண்டு வர இன்று பிஎல் சந்தோஷ் டெல்லியில் இருந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வருகிறார்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் நகர்ந்து வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில் மிகவும் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
கோபத்தில் ஓ.பி.எஸ்.:
தொடர்ந்து பாஜக-வால் புறக்கணிக்கப்பட்டு வந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும், அதே நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஓ.பி.எஸ். - பிஎல் சந்தோஷ் சந்திப்பு:
இந்த நிலையில், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று தமிழ்நாடு வருகிறார். இன்று தமிழ்நாடு வரும் பி.எல்.சந்தோஷ் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளார். அப்போது, பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க வைக்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அதிமுகவில் இருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பிறகு மோடி, அமித்ஷாவைச் சந்திக்க முடியாததே ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கு மிகப்பெரிய கோபம் ஆகும்.
சமரசம் ஆவாரா?
இதனால், அவரது கோபம் நீங்குவதற்காக பிரதமர் மோடியுடன் சந்திப்பை ஏற்படுத்தி தர பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிஎல் சந்தோஷ் உடனான சந்திப்பில் சமரசம் ஏற்பட்டால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் சமரசம் ஆனால் அவருக்கு அதிமுக-வில் ஆதாயம் கிடைக்குமா? அவரை கூட்டணியில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் விசுவாசி என்று பெயர் பெற்றவரும், அவரால் முதலமைச்சராக அடையாளம் காணப்பட்டவராகவும் தமிழக அரசியலில் திகழ்கிறார். அதிமுக-வில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டாலும் தென் தமிழகத்தில் தனக்கென்று தனி செல்வாக்கை ஓ.பன்னீர்செல்வம் கொண்டுள்ளார்.
குறிப்பாக, அவரது சமூகத்தினர் மத்தியில் அவருக்கு என்று மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அது தென்தமிழக வாக்குகளை அதிமுக - பாஜக கூட்டணிக்கு கிடைக்கவிடாமல் சிதறடிக்கும் என்று அஞசுவதாலே அவரை கூட்டணியில் கொண்டு வர பாஜக தலைமை ஆர்வம் காட்டி வருகிறது.





















