Mohan Bhagwat: ”கல்வி, மருத்துவம் எல்லாமே காசாயிடுச்சு” - பிரதமர் மோடி மீது ஆர்எஸ்எஸ் தலைவர் அட்டாக்?
Mohan Bhagwat: கல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டதாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கவலை தெரிவித்துள்ளார்.

Mohan Bhagwat: விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் சிரமப்படுவதாகவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
மோகன் பகவத் வேதனை:
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, கல்வி மற்றும் மருத்துவத்தில் வணிகமயம் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். ஒரு காலத்தில் இரண்டுமே சேவை துறைகளாக இருந்ததாகவும், ஆனால் அவை தற்போது சாதாரண மக்களுக்கு அணுக முடியாததாகவும், விலை கொடுத்து வாங்க முடியாததாகவும் உருவெடுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
”எட்டாக் கனியான கல்வி,மருத்துவம்”
நிகழ்ச்சியி பேசுகையில், “கல்வி மற்றும் மருத்துவம் என்பது மிகவும் முக்கியமானதாகவும். ஆரம்பத்தில் அவற்றை நாம் சேவைகளாக கருதினோம். ஆனால், அவை இரண்டுமே தற்போது சாதாரண மக்களின் அணுகலுக்கு அப்பாற்பட்டதாக மாறிவிட்டது. இரண்டுமே வணிகமயமாக்கப்பட்டுவிட்டன. மலிவு விலையிலும் இல்லை, அணுகக்கூடியதகாவும் இல்லை. நான் சிறுவயதில் இருந்தபோது மலேரியாவில் பாதிக்கப்பட்டேன். மூன்று நாள் பள்ளிக்கு செல்லாத நிலையில், எனது ஆசிரியர் மூலிகைச் செடிகளை கொண்டு வந்து கொடுத்து சிகிச்சைக்கு உதவினார். தன்னிடம் பயிலும் மாணவன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அந்த ஆசிரியர் கருதினார். சமூகத்திற்கு அணுகக் கூடிய மற்றும் மலிவு விலை மருத்துவம் தேவை” என மோகன் பகவத் குறிப்பிட்டார்.
அச்சுறுத்தும் விலைவாசி
மேலும், “தரமான புற்றுநோய் சிகிச்சை என்பது இந்தியாவில் 8 முதல் 10 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. அங்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு அதிக பணம் செலவாகிறது. நோயாளிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தாத சுகாதார பராமரிப்பு தேவை. சிகிச்சை கவலைக்குரியதாக மாறக்கூடாது. விலைவாசி உயர்வு பாமர மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை மருத்துவத்தால் ஒருவர் பயனடையலாம், மற்றவர்கள் ஹோமியோபதியால் பயனடையலாம், எந்த ஒரு வழியும் உயர்ந்ததாக இருக்க முடியாது.” என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
”உடைமைகளை விற்க வேண்டியுள்ளது”
தொடர்ந்து, “உலகம் முழுவதும் சமூகத்திற்கு மிகவும் அவசியமான இரண்டு பாடங்களாக சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளன. இன்றைய காலத்தை நாம் கற்றல் யுகம் என்று அழைக்கிறோம். நீங்கள் ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினால், உங்கள் உடலே அதற்கான வழி. எனவே, ஆரோக்கியமான உடல் இல்லையென்றால் நீங்கள் புத்திசாலியாக மாற முடியாது. ஒரு நபர் தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியையும், மருத்துவத்தையும் வழங்க தனது வீட்டையும் கூட விற்பார். ஆனால், இந்த இரண்டு முக்கியமான விஷயங்களும் இப்போது சாதாரண மக்களுக்கு எட்டாதவையாக இருப்பது முரண்பாடாக இருக்கிறது, மருத்துவமனைகளோ அல்லது கல்வி நிறுவனங்களோ குறைந்துவிடவில்லை. புதிய மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன, ஆனால் வணிகமயமாக்கல் அவற்றை சாதாரண மனிதர்களுக்கு எட்டாதவாறு மாற்றியுள்ளது” என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் மீது அட்டாக்?
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தான் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வுகள் மூலமாக கல்வி அனைவருக்குமானதாக மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் பேசி வருகிறார். இதுபோக பிரதமர் காப்பீடு திட்டம் போன்றவற்றால் சிகிச்சையும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், மலிவு விலையில் வழங்கப்படுவதாகவும் கூறி வருகிறார். இந்நிலையில் தான், பாஜகவின் தாய் கழகமாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் கல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம், அவர் பிரதமர் மோடிக்கு எதிராகவே பேசியதாகவும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே நடந்து வரும் பனிப்போரின் வெளிப்பாடே இது என்றும் கூறப்படுகிறது.





















