ஷெஃபாலி-மந்தானா அபார அரைசதம்: 2ஆவது நாள் முடிவில் இந்தியா 187 ரன்கள் குவிப்பு !
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் 4* ரன்களுடனும், தீப்தி சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பிரிஸ்டோல் நகரில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் நாளில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் கேத்ரின் பிரண்ட் விரைவாக ஜூலன் கோசாமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் சோஃபியா டங்க்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார். 8 ஆவது விக்கெட்டிற்கு அவரும் எக்லெஸ்டோனும் ஆகிய இருவரும் 56 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்த போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
அதன்பின்னர் இந்திய மகளிர் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாட தொடங்கியது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தானா மற்றும் ஷெஃபாலி வர்மா ஆகிய இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். இரண்டு வீராங்கனைகளும் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பவுண்டரிகளை விளாசி கொண்டிருந்தனர். அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய ஷெஃபாலி வர்மா தனது முதல் இன்னிங்ஸில் அரை சதம் கடந்தார்.
மறுமுனையில் ஸ்மிருதி மந்தானாவும் அரைசதம் கடந்து அசத்தினார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 167 ரன்கள் எடுத்தது. அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்த்த ஷெஃபாலி வர்மா 96 ரன்களில் கேட் க்ராஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தானாவும் 78 ரன்கள் எடுத்திருந்த போது நடாலி சிவர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்த களமிறங்கிய வீராங்கனைகள் பூனம் ராவத்(2), ஷிகா பாண்டே(0) விரைவாக விக்கெட்டை பறி கொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மித்தாலி ராஜ் 2 ரன்களுடன் எக்லெஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழந்து 187 ரன்கள் எடுத்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் ஹர்மன்பிரீத் கவுர் 4* ரன்களுடனும், தீப்தி சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் இருந்தனர். இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 209 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இன்னும் இரண்டு நாட்களே ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா சரியாக விளையாட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. 100 ரன்களுக்கு மேல் இந்தியா லீட் கொடுக்கும் பட்சத்தில் ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க வீராங்கனைகள் ஆட்டத்தை சிறப்பாக வழிநடத்தியும், அதன் பின் வந்தவர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எஞ்சியிருக்கும் ஆட்டக்காரர்கள் இன்று சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்திய மகளிர் அணி நல்ல ஸ்கோர் பெறலாம்.