கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
இந்த விபத்து பற்றி மக்கள், பலவிதமான கருத்துக்கள் கூறி வருகிறார்கள். ரயில்வே கேட் கீப்பர் தூங்கி விட்டார், அதனால் விபத்து என்று கருத்திடுகின்றனர்.

’கடலூர் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய நிகழ்வில் அத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி அளித்த தெளிவான விளக்கம்’ என்று ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
08/07/2025 காலை 07.45 மணியளவில், கடலூர் அருகில் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. ஒரு பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் அது தூக்கி வீசப்பட்டு, 3 பள்ளி மாணவர்கள் இறந்து விட்டனர். டிரைவர் உட்பட படுகாயமடைந்த ஒரு மாணவர் சிகிச்சை பெறுகிறார்.
இந்த விபத்து பற்றி மக்கள், பலவிதமான கருத்துக்கள் கூறி வருகிறார்கள். ரயில்வே கேட் கீப்பர் தூங்கி விட்டார், அதனால் விபத்து என்று கருத்திடுகின்றனர். அவர் பணியில் தூங்கியிருந்தால், நிச்சயம் தவறுதான். ஆனால், விபத்து அதனால் நடந்தது என்று கூறுவது சரியான காரணமல்ல.
இந்த விபத்துக்கு அந்த கேட் கீப்பர், 2 வகையாக தவறு செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த செம்மங்குப்பம் ரயில்வே கேட், இரண்டு ரயில்வே நிலையத்திற்கு இடையில் அமைந்துள்ள Non Interlocked type, manually operated LC gate. அதாவது, கேட் மூடினால்தான் சிக்னல் வரும் என்ற கட்டாயம் இல்லாத கேட். இதன் செயல்முறை எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
இந்த வகை கடவுகள் (LC gates) அதிக ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து இல்லாத இடங்களில் அமைக்கப்படும். இது ரயில்வே Engineering பிரிவு பணியாளர்கள் பணிபுரியும் கேட்.
இந்த கடவுகளின் இருபுறமும் இருக்கும் ஸ்டேஷன்களின் ஸ்டேஷன் மாஸ்டர்கள், இந்த கேட் கீப்பர்களை போனில் அழைத்து, தங்கள் நிலையத்திலிருந்து வரும் ரயிலின் விவரம், வண்டி எண், இந்த விவரம் தரும் நேரம், வண்டி கேட்டை கடக்கும் நேரம் கூறி ஒரு இரட்டை இலக்க ரகசிய எண்ணை Private Number கூறுவார்கள். அதை கேட்கீப்பர் குறித்துக் கொண்டு திரும்பக் கூறி தன்னிடமுள்ள, LC Gate Register-ல் குறித்துக் கொண்டு, தானும் ஒரு எண்ணை கூறுவார்.
ரகசிய எண் பரிமாற்றம்
அதன்பின் கேட் கீப்பர், சாலை போக்குவரத்து இருப்பதைப் பொறுத்து, விசில் அடித்தும், கேட் எச்சரிக்கை ஒலியை இயக்கியும், கேட்டை மூடுவார். மூடி அதை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொள்வார். பிறகு கேட்டை பூட்டியதை ரயில் அனுப்பும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் உறுதி செய்து, ரகசிய எண் தருவார். அதை ஏற்று ஸ்டேஷன் மாஸ்டர், தன் PN தருவார். இதற்கு PN Exchange System என்று பெயர்.
ஒவ்வொரு ரயிலுக்கும் இப்படி பரிமாறப்படும் தகவல்கள் SM office-லும், LC Gate-லும் ஆவணமாக இருக்கும்.
கேட்டை மூடச் சொன்னேன் என்று ஸ்டேஷன் மாஸ்டர் பொய் சொல்ல முடியாது. ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லவில்லை என்று, இப்படி பரிவர்த்தனை பதிவான பின், கேட் கீப்பர் மறுக்க முடியாது.
இப்படி PN Exchange செய்ய அழைக்கும்போது, கேட் கீப்பர் தூங்கி விட்டிருந்தாலோ, போதையில் இருந்தாலோ, அல்லது உடல்நலக் குறைவால் பேச இயலாமல், போனில் பதில் வரவில்லை என்றாலோ..SM Controller-களுக்கு தகவல் தந்து விட்டு, ரயிலுக்கு வழக்கமான Normal Line Clear-ல் signal தராமல், மாற்று ஏற்பாடு செய்து ரயிலை, இயக்க அனுமதிப்பார். கையோடு, குறிப்பிட்ட LC GATE LC 70 Gate KEEPER, no responded.. என்று குறிப்பிட்டு, Caution Order தருவார்.
கேட் கீப்பர் தூங்கியிருந்தால்...
கேட் கீப்பர் தூங்கியிருந்தால், அந்த கேட் வரை சென்று, Assistant Loco Pilot கேட் கீப்பரை எழுப்பி, கேட்டை மூடச் சொல்வார். அவர் செயல்பட இயலாத நிலையில் இருந்தால் ALP-யே கேட்டைப் பூட்டுவார். வண்டி மெதுவாக கடவைக் கடந்ததும், ரயிலின் Guard இறங்கி ரயில்வே கேட்டை சாலை போக்குவரத்துக்குத் திறந்து வைத்து விட்டு, பிறகு ரயிலை இயக்க அனுமதிப்பார்.
இதுதான் முறை.
தூங்கி விட்ட கேட் கீப்பர் விழித்துக் கொண்டால் அவர் பார்த்துக் கொள்வார். ஆக,கேட் கீப்பர் தூங்கி விட்டதால் விபத்து என்பது சரியல்ல.
என்றாலும், பின்வரும் காரணங்கள் கேட் கீப்பரால் நடக்கும் சாத்தியக் கூறு உள்ளது.
1).கேட்டை மூடாமலேயே மூடியதாக உறுதி தந்தால், SM அறிய இயலாது
2). கேட்..Non Interlocked type என்பதால், மூடிய கேட்டை, இடையில் தன்னிஷ்டமாக கேட் கீப்பர் திறக்க இயலும்.
3) சில அவசர காலங்களில், பிரசவ வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகள், Ambulance, Fire fighting vehicles, வேறு தவிர்க்க இயலாத காரணங்களுக்கு,
SM and Gate keeper, தங்களுக்குள் பேசி PN exchange messages செய்து திறந்து மூடலாம், அவ்வாறு செய்யும்போது SM ரயிலை நிறுத்தி வைப்பார். அனுப்ப மாட்டார். ரயில் முறையாக லைன் கிளியர் சிக்னலில் புறப்பட்ட பின் தனது அனுமதிக்கப்பட்ட வேகத்தில் Permitted speedல் செல்வார்.
கேட் மூடப்பட்டிருக்கும் என்ற உறுதியால். கேட்டுக்கு முன்னதாக குறிப்பிட்ட தூரத்திலிருந்தே, விசிலை அடித்தவாறு செல்வார். கேட் மூடப்படாதது அருகில் செல்லும் போதுதான் தெரியும். அதனால் டிரைவர் தவறு இல்லை.
..
கேட்டை ரயில் கடக்கும்போது, கேட் கீப்பர் இரண்டு கைகளிலும், ஒன்றில் சிவப்பும், மற்றொன்றில் பச்சையும் கொடிகளைப் பிடித்து ரயில் செல்வதை கவனிக்க வேண்டும். ரயில் பத்திரமாகக் கடந்த பின் கேட்டைத் திறந்து விட வேண்டும்.
இதுதான் முறை.
ஆனால் இவ்வகையான கேட் வழியே, உள்ளூரில் பெரிய மனிதர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தனிப்பட்டவர்களின் டிரைவர்கள், பள்ளி வேன் டிரைவர்கள்.. ரயில் வர சற்றே கால தாமதமானால் மிரட்டி திறக்கச் சொல்வார்கள். இறந்தவர்கள் இறுதி ஊர்வலம் சமயத்தில் ரயிலை நிறுத்தி இவர்கள் போன பிறகுதான் போக வேண்டும் என்று மிரட்டுவார்கள்.
கேட் கீப்பர்கள் அங்கே தனியாக இருப்பார்கள். அவர்களோடு மோத முடியாது.
இதனால் Gate keeper-கள் தன்னிச்சையாக செயல்பட்டு விடுவதும் உண்டு. அது போல இங்கு நடந்திருக்க வாய்ப்புள்ளது.
என்னதான் தீர்வு?
இதற்கெல்லாம் ஒரே முடிவு. எல்லா கேட்களையும் ," Interlocked" gate களாக மாற்றுவது தான். .அல்லது மேம்பாலம்/ சுரங்கப் பாதை அமைப்பது தான் சரியான தீர்வாகும்.






















