EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நலன் மற்றும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் விதமாக உலகம் முழுவதும் மின்சார பேருந்துகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மின்சார பேருந்துகள் பயன்பாட்டை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. சென்னையில் முதற்கட்டமாக சுமார் 120 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மின்கட்டணம் உயர்வு:
இந்த நிலையில், தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாதாரண வீட்டு உபயோகம் இல்லாமல் தொழில், வணிகம் உள்ளிட்ட பிரிவிற்கு மின்கட்டணத்தை 3.16 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இது தற்போது மின்சார வாகனங்களுக்கான பயன்பாட்டில் எதிரொலித்துள்ளது.
எகிறிய சார்ஜிங் கட்டணம்:

அதாவது, மின்கட்டண உயர்வால் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டணம் உயர்ந்துள்ளது. அதுவும் நேரத்திற்கு ஏற்றாற்போல வசூலிக்கப்படுகிறது. சூரிய ஒளி இருக்கும் நேரத்திற்கு ஏற்றாற்போல இந்த கட்டணம் மாறுபடுகிறது. ஒரு கிலோவாட்டிற்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என்பதை கீழே காணலாம்.
புதிய கட்டணங்கள்:
காலை 6 மணி முதல் 9 மணி வரை - ரூபாய் 9.75
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை - ரூபாய் 6.50
மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை - ரூபாய் 8.10
மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை - ரூபாய் 9.75
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை - ரூபாய் 8.10
இவ்வளவு உயர்வா?
சார்ஜிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மின்சார வாகனங்கள் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது பல பெட்ரோல் பங்குகளிலும் சார்ஜிங் ஸ்டேஷனும் நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் ஒரு கிலோ வோல்ட் ஆம்பியருக்கு மாதத்திற்கு ரூபாய் 145 செலவு செய்த பயனாளர் தற்போது ரூபாய் 304 செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதாவது, புதிய மின்கட்டணத்தின்படி சார்ஜிங் நிலையத்தில் 50 கிலோ வாட்டிற்கு ரூபாய் 1300 ஆக இருந்த சார்ஜிங் கட்டணம் இனி ரூபாய் 2 ஆயிரத்து750 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் ஏராளமான மின்சார கார்களும், மின்சார இரு சக்கர வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளது. ஆனாலும், இந்த வாகனங்களுக்கான சார்ஜ் வீடுகளிலே போட்டுக்கொள்ளும் வசதிகள் அந்தந்த வாகனங்களிலே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நீண்டதூர பயணங்களின்போது சார்ஜிங் ஸ்டேஷனை நம்பியிருக்க வேண்டியுள்ளது.
பயனாளர்கள் அதிருப்தி:

இரு சக்கர வாகனங்கள், கார்கள் வீடுகளிலே சார்ஜ் போட்டுக்கொண்டாலும், பேருந்துகள் சார்ஜ் நிலையங்களில்தான் சார்ஜ் போட வேண்டிய சூழல் உள்ளது. தமிழ்நாட்டில் மின்சார பேருந்து இயக்கத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்னும் முழுவீச்சில் ஆர்வம் காட்டவில்லை. மின்சார பேருந்துகள் உள்பட மின்சார வாகனங்களின் செயல்பாட்டை முழுவீச்சில் கொண்டு வர உள்ள தயாராகும் நிலையில், இந்த சார்ஜிங் கட்டணம் பயனாளிகளுக்கு மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தெலங்கானாவில் சார்ஜிங் கட்டணம் குறைவு ஆகும்.





















