உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
ரயில் அதிகாரி விமல் பயணிகள் ரயில் வருவதைக் கூற, கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை அழைத்த நிலையில், அவர் அழைப்பை ஏற்காமல் உறங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் அதிகாரி விமல் பயணிகள் ரயில் வருவதைக் கூற, கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை அழைத்த நிலையில், அவர் அழைப்பை ஏற்காமல் உறங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கோர விபத்தில் பலியான உயிர்கள்
கடலூர் செம்மங்குப்பம் ரயில் கிராஸிங்கில், நேற்று (ஜூலை 8) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் நிமலேஷ், செழியன் மற்றும் மாணவி சாருமதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பள்ளி வேனில் பயணித்த விஸ்வேஷ் என்ற மாணவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விஸ்வேஷ், இந்த கோர விபத்தின்போது, ரயில்வே கேட் மூடப்படாமலே இருந்தது என்றும், கேட்கீப்பர் பங்கஜ்சர்மா உள்ளே உட்கார்ந்து இருந்தார் என்றும் கூறி இருந்தார். வேன் ஓட்டுநரும் அவ்வாறே கூறி இருந்தார்.
3 அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு
இந்த விபத்து குறித்து விசாரித்து தெற்கு ரயில்வேயிடம் அறிக்கை அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் ரயில் அதிகாரி விமல் பயணிகள் ரயில் வருவதைக் கூற, கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை அழைத்துள்ளார். எனினும் பங்கஜ் சர்மா, அழைப்பை ஏற்காமல் உறங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனாலேயே விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
13 பேருக்கு சம்மன்
அதேபோல கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. நேற்று கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஜூலை 22ஆம் தேதி வரை கடலூர் மத்தியச் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே இன்று புதிய கேட் கீப்பராக ஆனந்த் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.






















