மாஸாக சைக்கிள் ஓட்டிய மத்திய அமைச்சர்.. உற்சாகப்படுத்திய தி கிரேட் காளி!
ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிளிங் நிகழ்வில் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா கலந்து கொண்டார்.

குஜராத்தின் காந்திநகரில் ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிளிங் நிகழ்வு நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவிற்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமை தாங்கினார்.
மாஸாக சைக்கிள் ஓட்டிய மத்திய அமைச்சர்:
இந்த நிகழ்வு இன்று நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வாரம் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு, நாடு முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.
காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வின்போது பேசிய அமைச்சர் மண்டாவியா, ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஒட்டும் நிகழ்வு இப்போது நாடு தழுவிய ஒரு வலுவான முன் முயற்சியாக மாறியுள்ளது என்றார். இது, பிரதமர் நரேந்திர மோடியின் உடல் திறன் இந்தியா இயக்கத்தை முழு வீச்சில் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது, உடற்பயிற்சி பற்றியது மட்டுமானதாக இல்லாமல் தேசிய அளவில் ஆரோக்கியம் தொடர்பான ஒரு முக்கிய முயற்சியாகவும் மாறியுள்ளது என்று அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறினார். இந்த வார மிதிவண்டி ஓட்டும் நிகழ்வுகளில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், கெயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல், ஆயில் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உற்சாகப்படுத்திய தி கிரேட் காளி:
தேசிய தலைநகர் டெல்லியில், மேஜர் தியான் சந்த் மைதானத்தில் கயிறு தாண்டுதல், ஜூம்பா, யோகா நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் கூடிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குர்கானில் நடைபெற்ற நிகழ்வில் 700 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டுதல், யோகா செய்தல் மற்றும் பல விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இதில், ஒரு பகுதியாக 3000-க்கும் மேற்பட்ட மிதிவண்டி ஓட்டும் சங்கங்கள் இணைந்து ஒவ்வொரு வாரமும் இதில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன.
இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.






















