இறுதி அத்தியாயத்தை எழுதி கொண்டிருக்கிறதா ஹமாஸ் அமைப்பு? தலைவருக்கு வைக்கப்பட்ட குறி
இஸ்ரேல் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் வீட்டில் இஸ்ரேல் பாதுகாப்பு படை குண்டை வீசியுள்ளது.
இஸ்ரேல் நடத்தி வரும் போரால் பாலஸ்தீன பகுதியான காசா நிலைகுலைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய போர் தீவிரம் அடைந்துள்ளது. தாக்குதலை பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடங்கியிருந்தாலும், தற்காத்து கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் அப்பட்டமான போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 11,320 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 4,650 குழந்தைகளும் 3,145 பெண்களும் அடங்குவர். மருத்துவமனை, அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மனிதத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது.
போரில் திணறி வரும் ஹமாஸ் அமைப்பு:
போரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் விதியாக இருக்கும் சூழலில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் அப்பட்டமான போர் மீறலில் ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் போரை எதிர்கொள்ள முடியாமல் ஹமாஸ் அமைப்பு திணறி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் வீட்டில் இஸ்ரேல் பாதுதாப்பு படை குண்டை வீசியுள்ளது. போர் விமானங்கள் மூலம் ஹனியேவின் வீட்டில் குண்டுகள் வீசப்படும் வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு படை பகிர்ந்துள்ளது. வீசப்பட்ட குண்டில் அவர் உயிரிழந்துவிட்டாரா அல்லது அவரின் நிலை என்பது குறித்து இன்னும் தகவல் வெளியிடப்படவில்லை.
காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களில் இஸ்மாயில் ஹனியேவும் ஒருவர். அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக உள்ளார். இவரை, ஹமாஸ் அமைப்பின் தலைவராக பல நாடுகள் அங்கீகரித்துள்ளது. இஸ்மாயில் ஹனியேவின் வீடு, பயங்கரவாத செயல்களுக்காக பயன்படுத்துப்பட்டு வருகிறது.
தலைவருக்கு வைக்கப்பட்ட குறி..?
இஸ்ரேல் நாட்டின் அப்பாவி மக்கள், ராணுவத்தினர் ஆகியோர் மீது நேரடியான தாக்குதலை தொடுப்பது குறித்து திட்டம் தீட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள், ஹனியேவின் வீட்டில் சந்தித்துதான் ஆலோசனை நடத்துவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 1990களில், பிரபலம் அடைய தொடங்கிய இஸ்மாயில் ஹனியே, ஹமாஸ் அமைப்பின் நிறுவனரான ஷேக் அகமது யாசினுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டு வந்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு, ஷேக் அகமது யாசின் கொல்லப்பட்ட பிறகு, ஹனியேவின் செல்வாக்கு அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2006ஆம் ஆண்டு, ஹமாஸ் அமைப்பினரை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றதை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பிரதமராக ஹனியே தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2017இல் ஹமாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காசாவிற்கு வெளியே இருந்து கொண்டு, ஹமாஸ் அமைப்பின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.