Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Teachers Protest: 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜூலை 17 முதல் 18ஆம் தேதி வரை மாவட்ட தலைநகர்களில் மறியல் போராட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து 17.07.2025 வியாழன் , 18.07.2025 வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் மாவட்ட தலைநகர்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்க டிட்டோஜேக் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து டிட்டோஜேக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூறி உள்ளதாவது:
’’தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மறியல் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி சுமங்கலி மகாலில் நடைபெற்றது. டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ச.மயில் தலைமையேற்றார். 38 மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
10 அம்சக் கோரிக்கைகள்
1. பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்கவேண்டும்.
3. தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பான நிலையை உருவாக்கியுள்ள மாநில அளவில் முன்னுரிமை என்ற அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.
4 . தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ .5400 தர ஊதியத்தை குறைத்து பெற்ற ஊதியத்தை தணிக்கை தடை மூலம் திரும்ப செலுத்த சொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஜூலை 17, 18-ல் மறியல் போராட்டம்
உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து 17.07.2025 வியாழன் , 18.07.2025 வெள்ளி ஆகிய இரண்டு நாட்களும் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தகுதி வாய்ந்த விடுப்பை எடுத்துக்கொண்டு மாவட்ட தலைநகர்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மறியல் போராட்டத்தை எழுச்சியாக நடத்த 14.07.2025 , 15.07.2025 மற்றும் 16.7.2025 ஆகிய மூன்று நாட்களில் தீவிரமாக ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், டிட்டோஜேக் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்துப்பேசி கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது’’.
இவ்வாறு டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பகுதி நேர ஆசிரியர்கள், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, இன்று (ஜூலை 14) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வித் துறை வளாகம் (டிபிஐ) முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.






















