விழுப்புரம்: தங்கும் விடுதிகளில் அதிரடியாக நடந்த சோதனை.. என்ன ஆச்சு?
மாவட்டத்திற்கும் சம்மந்தம் இல்லாத வெளியூர் ஆட்கள் யாராவது தங்கி இருக்கிறார்கள் எனக் கண்டறிவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை.
விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை, தொகுதிக்கு சம்மந்தமில்லாத வெளி ஆட்கள் உடனடியாக வெளியேறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக பல்வேறு வெளியூர்களில் இருந்து வந்து தங்கியிருந்த தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத ஆட்கள், உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தங்கி இருந்த வெளியூர் ஆட்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தொகுதிக்கும், மாவட்டத்திற்கும் சம்மந்தம் இல்லாத வெளியூர் ஆட்கள் யாராவது தங்கி இருக்கிறார்கள் எனக் கண்டறிவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
விழுப்புரத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓவ்வொரு தங்கும் விடுதிகளுக்கும் போலீசார் நேரில் சென்று பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், தங்கும் விடுதியில் உள்ள அறைகளுக்கு சென்று அங்கு தங்கி இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளியூர் ஆட்கள் உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியேறாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.