நெல்லையில் பழந்தமிழரின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்
இங்குள்ள மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் பொருட்டு உள்ளூர் வீடுகளின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாக முற்றங்கள்,தாழ்வாரங்கள், மரம்,கல்தூண்கள் போன்றவடிவமைப்பில் கட்டப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிபடுத்தும் விதமாக ரூபாய் 33.02 கோடி மதிப்பீட்டில் நெல்லையில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு 13.2 ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைக்கிறது. இப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதன்படி நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் புறவழிச்சாலையில் அமைந்துள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் சுமார் 13.02 ஏக்கர் பரப்பளவில் 33.02 கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டும் பணியை முதல்வர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில் இந்த கட்டிடப் பணிகள் முழுவதுமாக 18 மாதங்களுக்குள் அதாவது 17.11.2024 ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தமாக 54, 296 சதுர அடியில் நிர்வாக கட்டிட தொகுதி, கொற்கை கட்டிட தொகுதி, ஆதிச்சநல்லூர் கட்டிட தொகுதி, சிவகளை கட்டிட தொகுதி என 4 முதன்மை தொகுதிகள் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடத்தின் வடிவமைப்பு இங்குள்ள மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் பொருட்டு உள்ளூர் வீடுகளின் கலை நயத்தை பறைசாற்றும் விதமாக முற்றங்கள், தாழ்வாரங்கள், மரம், கல்தூண்கள் போன்றவற்றை உள்ளடக்கிய வடிவமைப்பில் கட்டப்பட உள்ளது.
காணொளி காட்சி வாயிலாக சென்னையிலிருந்து முதல்வர் தொடங்கி வைத்ததும், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் அருங்காட்சியக கட்டிட பணிகளுக்காக திட்டமிடப்பட்டு அளவிடப்பட்டிருந்த பகுதியில் பொக்லைன் மூலம் தோண்டும் பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பணிகளை நேரில் ஆய்வு செய்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்... அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறும் போது... இந்த பொருளை அருங்காட்சியகம் அமையும் போது இந்த சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் இங்கு உணவகங்கள் தொடங்கி மக்கள் தேவைக்கான அடிப்படை வசதிகள் கொண்ட அனைத்தும் உருவாக்கப்படும் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறும் போது, பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணியை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இங்கு ஆதிச்சநல்லூர் காட்சி கூடம், சிவகளை காட்சி கூடம், கொற்கை காட்சி கூடம் என மூன்று வளாகங்கள் அமைகிறது . மேலும் சிற்றுண்டிச் சாலைகள், வாகன நிறுத்தம் ஆகியவைகளும் அமைக்கப்படுகிறது . கலைஞர் நூலகமும் அமையும் வாய்ப்பு உள்ளது, இந்த அருங்காட்சியகம் அமைவதால் இப்பகுதி மக்களுக்கு மிக்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும், மனித நாகரிகத்தின் தொட்டில் என்ற பெருமை நெல்லைக்கு கிடைத்துள்ளது, சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிரிந்தது என கூறினார்கள் அதனை பொருநை நாகரிகம் உடைத்துள்ளது , முதல் மனித நாகரிகம் சிந்துச்சமவெளி நாகரிகம் என்பதற்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பொருநை நாகரிகம் தான் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம், பொருநை நாகரிகம் அறிவியல் பூர்வமாக நிருப்பிக்கப்பட்டுள்ளது . இந்த அருங்காட்சியக பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என தெரிவித்தார். மேலும் மக்கள் பயன்பாட்டுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலைஞர் நூலகம் இதே பகுதியில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.