திருநெல்வேலியில் வரிசையாக 5 கொலை: 12 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேருக்கு ஆயுள் தண்டனை: நடந்தது என்ன?
Nellai - Veeravanallur Case: திருநெல்வேலி வீரவநல்லூரில் தொடர்ச்சியாக நடைபெற்ற 5 கொலை சம்பவத்தில் , 12 ஆண்டுகளுக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட வீரவநல்லூரில் கடந்த 2000-ம் வருடம் வயலில் மாடு மேய்ப்பது சம்பந்தமாகவும் ஒரு தரப்பினரின் வளர்ச்சி மற்றொரு தரப்பினருக்கு பிடிக்காமலும் ஏற்பட்ட முன்பகை காரணமாக கடந்த 2000, 2001, 2009, 2011 மற்றும் 2013 ம் ஆண்டு என வரிசையாக நடைபெற்ற 5 கொலை வழக்குகளில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 4 பேருக்கு ஆயுள் தண்டனையானது , 12 வருடங்களுக்கு பிறகு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கு என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பழிக்கு பழி:
கடந்த 2009 ம் ஆண்டில் வீரவநல்லூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரது கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக, கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி வீரவநல்லூரைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் சுப்பையா தாஸ்(38), பொன்னையா தாஸ் என்பவரின் மகன் சுரேஷ் (37), அருணாச்சலம் என்பவரின் மகன் சுரேஷ் (37). கொம்பன் என்பவரின் மகன் கொம்பையா (38) ஆகிய 4 பேர் மற்றும் 17 நபர்கள் சேர்ந்து வீரவநல்லூர் பசும்பொன் தெருவை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் ரத்தினவேல் பாண்டியன் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். இது சம்பந்தமாக இறந்து போன ரத்தினவேல் பாண்டியன் மகன் வெள்ளத்துரை அளித்த புகாரின் அடிப்படையில் வீரவநல்லூர் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 21 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read: மக்களே எச்சரிக்கை! நாளை 17 மாவட்டங்களில் 100 ஐ தாண்டும் வெயில்: லிஸ்ட் இதோ
Also Read: இல்லம் திரும்பிய போப் பிரான்சிஸ் முதல் உரை: என்ன சொன்னார் தெரியுமா?
4 பேருக்கு ஆயுள் தண்டனை:
இவ்வழக்கின் விசாரணையானது, முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது கடந்த 12 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில், அவ்வழக்கின் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணையை துரிதப்படுத்தினார். சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விசாரணை முடித்து 26.03.2025-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன் விசாரித்தார். இந்நிலையில், சுப்பையா, பொன்னையர் தாஸ் என்பவரின் மகன் சுரேஷ், அருணாச்சலம் என்பவரின் மகன் சுரேஷ், கொம்பன் என்பவரின் மகன் கொம்பையா ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். வரிசையாக நடைபெற்ற ஐந்து கொலை வழக்குகளில் இதுவே தண்டனை பெற்ற முதல் வழக்காகும்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சத்யராஜ் மற்றும் வீரவநல்லூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.
41 பேருக்கு ஆயுள் தண்டனை:
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2-அரை மாதங்களில் ஏற்கனவே நடைபெற்ற ஜாதிய கொலைகள், பழிக்கு பலியான கொலைகள் போன்ற முக்கிய கொலை வழக்குகள் மற்றும் வீரவநல்லூரில் ஏற்கனவே நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 2009-ஆண்டு வீரவநல்லூர் அருகே உப்புவாணிமுத்தூர் ஊரில் நடந்த 5 கொலை வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும். பாளையஞ்செட்டிகுளத்தில் ஒரே சமுதாயத்தினர் இடையே நடைபெற்ற கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோபால சமுத்திரம் பகுதியில் 2021 ம் ஆண்டு நடைபெற்ற ஜாதிய கொலை வழக்கையும் துரிதப்படுத்தி 3 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் பெறப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் 2025 ஆம் வருடத்தில் மட்டும் இதுவரை 12 கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனையும், 41 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.





















