என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது பாமகவைச் சேர்ந்த உறுப்பினர் ஜி.கே.மணி பேசிக்கொண்டிருக்கும்போது என்ன வேணும் உங்களுக்கு என சபாநாயகர் அப்பாவு கடிந்து கொண்டார்.

சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது பாமகவைச் சேர்ந்த உறுப்பினர் ஜி.கே.மணி பேசிக்கொண்டிருக்கும்போது என்ன வேணும் உங்களுக்கு என சபாநாயகர் அப்பாவு கடிந்து கொண்டார். இதைக்கேட்ட ஜி.கே.மணி திகைத்துப் போய் நின்றார்.
இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது வினா விடை பகுதி சென்று கொண்டிருந்தது. அப்போது பாமகவைச் சேர்ந்த ஜி.கே.மணிக்கு நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “குறைந்த மழை பொழிகிற மாவட்டம் தருமபுரி மாவட்டம். பெரிய பாசனத் திட்டங்கள் இல்லாத மாவட்டம். ஏழை எளிய சிறு குறு விவசாயிகள் மானாவாரி பயிரை நம்பியே வாழும் மாவட்டம். எந்த தொழிற்சாலைகளும் இல்லை.
இதனால் அண்டை மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வேலை தேடி செல்லும் நிலை உள்ளது. குடும்ப பொருளாதாரமாக உள்ளது….” என பேசிக்கொண்டிருக்கும்போதே சபாநாயகர் அப்பாவு “என்ன வேணும் உங்களுக்கு? “ என காட்டமாக கேட்டார். “அதுதான் சொல்ல வருகிறேன்” என சொல்ல வந்தார் ஜி.கே.மணி.
குறுக்கிட்ட அப்பாவு, “என்ன வேணும் உங்களுக்கு? பொருளாதாரம் வேண்டுமா? தண்ணீர் வேண்டுமா? நேரடியாக கேள்விக்கு வாருங்கள்” என கடிந்து கொண்டார்.
இதற்கு பதிலளித்த ஜி.கே. மணி “ஒரே வரியில் கேள்வி கேட்டால்.. இல்லை என ஒரே வரியில் பதில் சொல்லிவிடுவார்கள். காரணங்களை சொன்னால்தான் பரிசிலிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அப்பாவு, “ஒரே வரியில் கேட்டால் அவர்கள் இல்லை என சொல்வார்கள். இப்படி இழுத்துக்கொண்டே இருந்தால் நான் இல்லை என்று சொல்லிவிடுவேன்” என சிரித்தார்.
இதையடுத்து ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். ”காவிரி ஆற்றின் நீர் கடலுக்கு வீணாக செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் ஏரி, குளம் குட்டைகளில் நிரப்பினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை முதலமைச்சர் கூட நேரில் பார்வையிட்டார். கோரிக்கை வைத்தோம். ஏற்றுக்கொண்டார்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “இதுகுறித்த சாத்தியக்கூறு அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

