TVK Member Audio | "15 லட்சம் இருந்தால்தான் பதவி என்ன சாதி நீ?”தவெக நிர்வாகியின் பகீர் ஆடியோ | Vijay
சாதி மற்றும் பணம் அதிகத்துடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகம் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தங்களின் குமுறல்களை ஆடியோவாக பதிவுகளாக தவெக குழுவில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சலை பகுதியில் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தினார்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட த.வெ.க தலைமை தீவிரமாகி வருகிறது. இது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என். ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரைக் கொண்ட குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி தொடங்கப்பட்டு வரும் பிப்ரவரி 2-ம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது. கட்சியின் பொதுச் செயலாளர், பொருளாளர் எனக் குறிப்பிட்ட சிலரின் பொறுப்புகள் குறித்துதான் தகவல்கள் வெளியாகியிருக்கிறதே தவிர, மாவட்டம், ஒன்றியம், பேரூர், பகுதி, வட்ட கழகங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. கட்சியிலுள்ள அணிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஒவ்வொரு பதவிக்கும் பல லட்சங்கள் நிர்ணயம் செய்து வசூல் செய்யும் பணியில் மூத்த நிர்வாகிகள் கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கூட என். ஆனந்த் ஒரு கட்சி நிகழ்சியில் பதவிவிக்கு யாரும் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் விழுப்புரம் தமிழக வெற்றி கழகத்தின் வாட்சப் குழுவில் பதவிகள் விலைக்கு தான் வழங்கப்படும் எனவும், நகர செயலாளர் பதவிக்கு ரூபாய் 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை விஜய் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவில் பதிவு செய்து வருகின்றனர். " பணம் இருந்தால் தான் பதவி என்ன கருமம்டா இது" என ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்... மேலும் தமிழக வெற்றிக் கழக தொடர்களின் குமுறல் வெளிவர தொடங்கியுள்ளது, அந்தவகையில் தவெக தொண்டனின் குமுறல் ஆடியோ வெளியாகியுள்ளது.
இத்தகைய சூழலில் கட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள்ளேயே இத்தகை நிகழ்வுகள் நடப்பது கட்சி தடம் மாறி செல்கிறது என்பதை தெரிவிப்பதாகவும் மேடையில் வீர வசனம் பேசும் விஜய் தன் முதுகை திரும்பி பார்க்க வேண்டும் என மற்ற கட்சி நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.





















