"தற்கொலை பண்ணிக்குவேன்" என மிரட்டினால் இனி டைவர்ஸ்.. தம்பதிகளே இதை தெரிஞ்சுக்கோங்க!
"தற்கொலைக்கு மிரட்டல் விடுப்பது அல்லது முயற்சிப்பது 'கொடுமை'க்கு சமம். விவாகரத்து கோருவதற்கு சரியான காரணம்" என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"கணவனோ அல்லது மனைவியோ தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினால் அது கொடுமை செய்வதற்கு சமம். இது விவாகரத்து கோர சரியான காரணம்" என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கு ஒன்றில் விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
வழக்குக்கு தொடர்புடைய தம்பதிக்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறது. தனது மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து தனது திருமண வாழ்க்கையில் தலையிடுவதாக கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு, தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறி, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று, திரும்பி வர மறுத்ததாகவும் கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும், ஒரு முறை தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகவும் கணவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக பொய்யான புகார்களைப் பதிவு செய்து சிறைக்கு அனுப்புவதாக தனது மனைவி கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கணவரின் குற்றச்சாட்டுகளை மறுத்த மனைவி, "எனது கணவரும் அவரது தந்தையும் என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே, வீட்டை விட்டு வெளியேறினேன். எனது கணவரை நான் கொடுமைப்படுத்தவில்லை" என்றார்.
"தற்கொலை செய்வேன் என மிரட்டினால்"
இதையடுத்து, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், "தற்கொலை செய்து கொண்டு, தன்னையும் தனது குடும்பத்தினரையும் சிறையில் அடைப்பதாக தனது மனைவி மிரட்டியதாக கணவர் குற்றம் சாட்டினார். இது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொடுமைக்கு சமம். எனவே, விவாகரத்து வழங்கப்படுகிறது" என தீர்ப்பு வழங்கியது.
குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் மனைவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். எம். ஜோஷி, "குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மற்றும் பிற சாட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், தன்னை கொடுமை செய்ததாக கணவர் எடுத்துரைத்த வாதங்களை போதுமான அளவு நிரூபிக்கின்றன.
தற்கொலைக்கு மிரட்டல் விடுப்பது அல்லது முயற்சிப்பது 'கொடுமை'க்கு சமம். விவாகரத்து கோருவதற்கு சரியான காரணம்" எனக் கூறி குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

