Oscar Nominations 2025 Academy Awards: சூர்யாவின் கனவு கலைந்தது.. தூக்கி வீசப்பட்ட கங்குவா.. ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல்
Oscar Nominations 2025 Academy Awards: ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் வெளியாகி, இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Oscar Nominations 2025 Academy Awards: ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 10 இந்திய திரைப்படங்களில், 9 படங்கள் இறுதி பரிந்துரை பட்டியலுக்கு முன்னேறவில்லை.
97வது ஆஸ்கர் விருது:
திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் பல சிறந்த படங்களை தேர்வு செய்து, வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு திரைத்துறையினர் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் நடைபெற உள்ள 97வது அகாடமி விருது வழங்கும் விழா, மார்ச் 2ம் தேதி அமெரிக்காவில் உள்ள பிரபலமான டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.
இதற்காக இறுதி பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய சினிமா கலவையான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 10 படங்களில், ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இறுதி நாமினேஷன் லிஸ்டிற்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு பல இந்திய திரைப்படங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததாக கூறப்பட்டாலும், ஒன்பது திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
புறக்கணிக்கப்பட்ட இந்திய திரைப்படங்கள்:
ஸ்வதந்த்ரியா வீர் சாவர்க்கர், புதுல், ஆடுஜீவிதம்: தி ஆடு லைஃப், ஆல் வி இமேஜின் அஸ் லைட், பேண்ட் ஆஃப் மஹாராஜாஸ், கங்குவா, தி ஸீப்ராஸ், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் மற்றும் சந்தோஷ் ஆகிய படங்கள் அனைத்தும் இந்தியா தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு இருந்தன. ஆனால், அவை அனைத்தும் இறுதி நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறவில்லை. அதேநேரம், அனுஜா எனப்படும் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் இறுதி நாமினேஷன் லிஸ்டிற்கு முன்னேறியுள்ளார். இது ஆடம் ஜே. கிரேவ்ஸ் இயக்கிய குனீத் மோங்கா மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட குறும்படமாகும். இது சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அனுஜா குறும்படம் சொல்வது என்ன?
ஆடம் ஜே. கிரேவ்ஸ் இயக்கிய, ஒன்பது வயது அனுஜாவின் (சஜ்தா பதான்) கதை இதயத்தைத் தூண்டும் மற்றும் சக்திவாய்ந்த கருத்தைச் சொல்கிறது. டெல்லியில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் அனுஜா, தனது சகோதரி பாலக்குடன் (அனன்யா ஷான்பாக்) பணியாற்றி வருகிறார். வாழ்க்கையை மாற்றும் ஒரு சூழலை எதிர்கொள்ளும் போது, அனுஜா தனது இளம் தோள்களில் தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் சுமந்து கொண்டிருப்பதை உணர்கிறாள்.
சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் செலவில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், ரசிகர்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யாததால் படம் தோல்வியை சந்தித்தது. கடுமையான விமர்சனங்களும் படத்தின் மீது எழுந்தன. இந்நிலையில் தான், சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவிலிருந்து கங்குவா திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இறுதி நாமினேஷன் லிஸ்டிற்கு சூர்யாவின் கங்குவா திரைப்படம் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.





















