Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவி சீரியலுக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
Singappenne Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண் சீரியலின் கதை போகும் போக்கு குறித்து, ரசிகர்களும், தாய்க்குலங்களும் கொதித்துப் போயுள்ளனர். எதற்காக தெரியுமா.?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே தொடர், ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களையும் கவர்ந்த ஒரு தொடராக உள்ளது. சன், விஜய், ஜீ என மூன்று தொலைக்காட்சித் தொடர்களையும் சேர்த்து, டிஆர்பி ரேட்டிங்கில் சிங்கப்பெண் தான் முதலிடம். அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த இந்த சிங்கப்பெண்ணை தற்போது அசிங்கப் பெண்ணாக மாற்றிவிட்டார்கள் என்பதுதான், தாய்க்குலங்களின் புலம்பலே.
TRP ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ள ‘சிங்கப் பெண்ணே‘
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரேட்டிங் முறை உள்ளது. மக்களின் மனங்களை எந்தெந்த சீரியல்கள் எந்த அளவிற்கு கவர்ந்துள்ளன என்பதை, தொலைக்காட்சி நிறுவனங்கள் இதன் வாயிலாக அறிந்துகொள்கின்றன. அந்த வகையில், சன், விஜய், ஜீ என அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே, சன் டிவியில் ப்ரைம் டைம் என கருதப்படும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ‘சிங்கப் பெண்ணே‘ சீரியல்தான், டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ள சீரியல். அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது அந்த கதைக்களம் மற்றும் அதில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு.
சீரியல்களிலேயே அற்புத காதல் ஜோடி என பெயர் பெற்ற ஆனந்தி-அன்பு ஜோடி
சிங்கப்பெண்ணே சீரியலின் கதாநாயகன் அன்பு மற்றும் கதாநாயகி ஆனந்தி ஜோடிதான், சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடி. அந்த அளவிற்கு ஒரு மென்மையான, அதே நேரத்தில் அழுத்தமான காதலை மையப்படுத்தி இந்த கதை நகர்கிறது. கார்மெண்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆனந்தியை, அங்கு சூப்பர்வைசராக இருக்கும் அன்பு காதலிக்கிறார். ஆனால் ஆனந்திக்கு இவர் மேல் காதல் இல்லை. ஏனென்றால், அழகன் என்ற பெயரில் ஆனந்தியின் மனம் கவரும் வகையில் அடிக்கடி காதல் பரிசுகள் மற்றும் கவிதைகள், அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு கொரியரில் வருகிறது.
ஆரம்பத்தில், அதை அனுப்புவது யார் என்று அனைவருக்குமே தெரியாமல் இருந்த நிலையில், அதை அன்புதான் அழகன் என்ற பெயரில் அனுப்புகிறார் என்பதை, ரசிகர்களுக்கு மட்டும் தெரியப்படுத்தி, கதையின் சுவாரஸ்யத்தை கூட்டினர். ஒருபுறம் அன்பு, ஆனந்தியை காதலிக்க, அவரோ, அர்த்தமுள்ள பரிசுப்பொருட்கள் மூலம் ஆனந்தியின் மனதை வென்ற அழகனை, யார் என்று தெரியாமலேயே காதலிக்கத் தொடங்குகிறார் ஆனந்தி.
இதனிடையே, கார்மெண்ட் நிறுவன உரிமையாளரின் ஒரே வாரிசான மகேஷ், ஆனந்தி மீது காதல் வயப்படுகிறார். ஆனால், கார்மெண்டில் உயர் பதவியில் இருக்கும் மித்ரா, மகேஷ் மீது தீவிரமான காதலில் இருக்கிறார். இதில் மக்களை கவர்ந்த விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவரின் காதலுமே புனிதமானதாக இருப்பதுதான். ஆசைக்கு இடம்கொடுக்காமல், அன்பை மட்டும் மையமாகக் கொண்டே இவர்களின் காதல் நகர்கிறது. பின்பு ஒரு கட்டத்தில், மகேஷ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்துகிறார். ஆனால், அவரது காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கும் ஆனந்திக்கு, அன்புதான் அழகன் என்பதும் ஒரு கட்டத்தில் தெரியவருகிறது.
இதனிடையே, மகேஷை விரும்பும் மித்ரா, ஆனந்திக்கு எதிராக சதிச் செயல்களை அரங்கேற்றி வருகிறார். ஒரு நிகழ்வின்போது, ஆனந்திக்கு போதை கலந்த ஜூஸை கொடுத்து, அவரது பெயரை கெடுப்பதற்காக ஒரு அறையில் அவளை அடைக்கிறாள். ஆனால், விதி வலியது என்பதுபோல், போதையான நிலையில் மகேஷூம் அந்த அறைக்குள் வந்து ஆனந்தியின் அருகே படுத்துக்கொள்கிறார். அதோடு அந்த எபிசோட் முடிக்கப்பட்டது.
இப்படி, முக்கோணக் காதல் கதையாக மாறும் கதைக்களத்தில், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்புக்கு ஈடு இணையே இல்லை என்பதுபோல் காட்சிகளை அமைக்கப்பட்டிருக்கும். மகேஷூம் மிகவும் நல்லவராக இருப்பதால், அவருக்காக அன்பு விட்டுக்கொடுக்க ஒரு கட்டத்தில் தீர்மானிக்கிறார். அதே சமயம், அன்பு-ஆனந்தி காதலை அறியவரும் மகேஷ், பைத்தியம் பிடித்தார்போல் நடந்துகொண்டு, உன்னை சும்மா விடமாட்டேன் என அன்புவை மிரட்டினாலும், பின்னர் தொடர்ந்து வில்லத்தனம் செய்யாமல், அமைதியாக பழைய அன்போடு பழகுகிறார். மறுபுறம், அன்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று, எந்த சூழலையுமே எதிர்க்கத் துணிகிறாள் ஆனந்தி. இப்படி, ஆனந்தி-அன்பு ஜோடி மக்களின் மனதில் அற்புத காதல் ஜோடியாக கோட்டை கட்டி அமர்ந்துள்ளது.
கதையின் போக்கு மாறியதால் தாய்க்குலங்கள் கொதிப்பு
இப்படி அற்புதமான கதாபாத்திரங்களோடு சிறந்த காதல் கதையாக சிங்கப் பெண்ணே நகர்ந்து வந்த நேரத்தில், தற்போது கதையின் களத்தையே வேறு ஒரு கோணத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் இயக்குனர். அதாவது, அவளுக்கு எதிராக நடக்கும் எல்லா சதிகளையும் முறியடிப்பதுடன், தன்னை சுற்றி உள்ளவர்களின் பிரச்னைகளையும் தீர்க்கும் ஒரு சிறந்த கேரக்டராக ஆனந்தி வாழ்ந்து வந்த நிலையில், திடீரென அவள் கற்பமடைந்துள்ளதாக கதைக்களத்தை மாற்றி, ரசிகர்களான தாய்க்குலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் இயக்குனர்.
ஆனந்திக்கு திடீரென அடிக்கடி மயக்கம் வருகிறது. வாந்தியும் எடுக்கிறார். இதனால் பதறிப்போகும் அன்பு, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவளை பரிசோதிக்கும் பெண் டாக்டருக்கு, ஆனந்தி கற்பமாக இருப்பது தெரியவருகிறது.
ஆனாலும், கிராமத்துப் பெண்ணாக இருக்கிறாரே, நேரடியாக சொன்னால் அதிர்ச்சியடைந்துவிடுவார் என எண்ணி, பக்குவமாக ஆனந்தியை தனியாக அழைத்துப் பேசுகிறார் அந்த டாக்டர். ஆனந்தி காதலிக்கும் அன்பு நல்லவரா என்ற கோணத்தில் எல்லாம் விசாரிக்கிறார். இதனால் சந்தேகமடையும் ஆனந்தி, நேரடியாக விஷயத்தை கூறுமாறு கேட்கிறார். இதையடுத்து ஆனந்தி கற்பம் என வந்திருக்கும் ரிப்போர்ட் குறித்து டாக்டர் சொன்னதைக் கேட்டவுடன் கொதித்தெழும் ஆனந்தி, பணத்திற்காக டாக்டர் பொய் சொல்வதாக கடுமையாக அவரை வசைபாடிவிட்டு சென்றுவிடுகிறாள். இதனால் அதிர்ச்சியடையும் டாக்டர், ஆனந்திக்கு தெரியாமலேயே ஏதே நடந்திருக்கிறது என எண்ணுகிறார்.
தற்போது இந்த நிலையில்தான் கதை நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் அன்புவிற்கே தன்னுடைய நிலை குறித்து ஆனந்தி தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தொடர் முழுக்க சிங்கப் பெண் என்ற டைட்டிலுக்கேற்ப சிங்கப் பெண்ணாக வலம் வந்த ஆனந்தியை, திருமணம் நடக்காமலேயே கற்பமடைந்ததாகவும், அதுவும், அதற்கு காரணம் யார் என்றே தெரியாத நிலையிலும் கதைக்களம் செல்வதைக் கண்டு, ரசிகர்கள், குறிப்பாக தாய்க்குலங்கள் கொதித்துப் போய் உள்ளனர்.
சிங்கப் பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டதாகவும், நன்றாக போய்க்கொண்டிருந்த கதையை ஏன் இப்படி கேவலமாக மாற்றிவிட்டார்கள் எனவும் புலம்பி, கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
சிங்கப் பெண்ணின் கதையை மாற்றுங்கள், அன்புவையும் ஆனந்தியையும் சேர்த்துவையுங்கள் ப்ளீஸ் என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் வாயிலாக கேட்டுள்ளனர்.

