கல்லூரி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் ! இனி உங்களுக்கு இலவச பஸ் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் முழுமையாக அரசே செலுத்தி வருகின்றது.

புதுச்சேரி கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி முடித்த நிலையில், இன்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது துறைகள் தொடர்பாக பதிலளித்து பேசியதாவது:
புதுச்சேரி பள்ளி மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும். இந்தாண்டு தலைமை காவல்துறை அலுவலகம் புனரமைக்கப்படும். புதுச்சேரி காவல்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். காவல்துறையினருக்கு சைபர் குற்றம் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியில் 2, கிராமப்புறங்களில் 2 மற்றும் காரைக்காலில் 1-நீட் பயிற்சி மையம் அரசு சார்பில் தொடங்கப்படும். அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும் மாலை நேரங்களில் சிற்றுண்டி திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் முழுமையாக அரசே செலுத்தி வருகின்றது. புதுவை பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் இயக்கப்படும் என்றார்.
மாநில அந்தஸ்து தொடர்பான விவாதம்
மாநில அந்தஸ்து பெறாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுச்சேரி பின்தங்கிய நிலையில் தான் இருக்கும் என, முதல்வர் ரங்கசாமி ஆதங்கத்துடன் கூறினார். கேள்வி நேரத்தின்போது, புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவது குறித்து சூடான விவாதம் நடந்தது.
அசோக்பாபு (பா.ஜ.க): புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக தொழில் துவங்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் திட்டம் எந்த அளவில் உள்ளது.
முதல்வர் ரங்கசாமி: ஜூன் மாதம் தொழிற்சாலைகளுக்கு நிலம் பிரித்துக்கொடுக்கப்படும். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆனால், யார் வருவர் என தெரியவில்லை.
அசோக்பாபு: புதுச்சேரியில் ஏராளமான நிறுவனங்கள் தொழில் துவங்க ஆர்வமாக உள்ளன.
முதல்வர் ரங்கசாமி: அப்படியெல்லாம் இதுவரை புதுச்சேரிக்கு எந்த தொழிற்சாலையும் வரவில்லை. நமது மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதிகளான வானூர், இரும்பையில் பல தொழிற்சாலைகள் உள்ளது. அதுவும் எவ்வளவு சீக்கிரத்தில் வருகிறது. அந்த அளவிற்கு அவர்களுக்கு உள்ள அதிகாரம் தான் முக்கிய காரணம். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று, பல தொழில் முனைவோரை சந்தித்து தொழிற்சாலை துவங்க அழைப்பு விடுத்தார். அதனால், தமிழக எல்லைகளில் தொழிற்சாலைகள் வந்துள்ளன.
இங்கு அதுமாதிரி எந்த அதிகாரமும் முதல்வருக்கு கிடையாது. அதாவது தமிழக முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை. இங்கு ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி பெறுவது எவ்வளவு கடினமாக உள்ளது என எல்லோருக்கும் தெரியும். இதனால்தான் ஒற்றைச்சாளர முறையை கொண்டுள்ளோம். தொழிற்சாலைகள் துவங்கிவிட்டு, 3 மாதத்தில் அனுமதி பெறலாம் என கூறினோம்.
நமது மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு சலுகை வழங்க, மத்திய அரசின் அனுமதி கேட்க மின்சாரம் வேண்டியுள்ளது. இணைப்பு பெறவே, தொழிலதிபர்கள் கஷ்டப்படுகின்றனர். இதற்கு அரசு நிர்வாகம்தான் காரணம். தொழிற்சாலைகளை அனுமதிப்பது தொடர்பாக, தலைமை செயலர் முடிவெடுத்தால் தான் அந்த கோப்பு நம்மிடம் வரும்.
இதனால்தான், மாநில அந்தஸ்து அவசியம் எனக்கேட்டு வருகிறோம். இதை எனக்காக நான் சொல்லவில்லை. எதிர்காலத்தில் யார் வந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக கேட்கிறோம்.
மாநில அந்தஸ்து பெறாவிட்டால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுச்சேரி பின்தங்கிய நிலையில்தான் இருக்கும் இதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

