IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR 2025: டி காக்கின் அபாரமான 97 ரன்கள் உதவியுடன் ராஜஸ்தான் அணியை கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

IPL KKR vs RR 2025: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் 18வது சீசனின் 6வது போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்த இரு அணிகளும் தங்களது முதல் வெற்றிக்காக இன்று களமிறங்கின.
152 ரன்கள் டார்கெட்:
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இந்த போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணிக்கு கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். குறிப்பாக மொயின் அலி - வருண் சக்கரவர்த்தி சுழல் தாக்குதல் நடத்தினர். சுனில் நரைன் இல்லாத சூழலில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா வேகத்தில் தலா 2 விக்கெட்டுகளை வருண், மொயின் அலி சுழலில் முறையே ரியான் பராக் மற்றும் ஜெய்ஸ்வால் அவுட்டாக 20 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி எடுத்தது.
டி காக் அசத்தல்:
152 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்காக மொயின் அலி - டி காக் ஆட்டத்தை தொடங்கினர். மொயின் அலி 5 ரன்னில் ரன் அவுட்டானாலும், டி காக் - கேப்டன் ரஹானே ஜோடி பொறுப்புடன் ஆடினார். மைதானம் சற்று பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததால் டி காக் நிதானமாகவே ஆடினார். ஆனாலும், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார்.
அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ரஹானே 18 ரன்களில் அவுட்டானார். ஆனாலும், டி காக் அரைசதம் கடந்து இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். 13வது ஓவரில் கொல்கத்தா அணி 100 ரன்களை எட்டியது. இதனால், கடைசி 36 பந்துகளில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.
எடுபடாத பவுலிங்:
டி காக் நிதானத்தில் இருந்து அதிரடிக்கு மாறி பவுண்டரியும், சிக்ஸரும் விளாச அவருக்கு மறுமுனையில் ரகுவன்ஷி ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் ரியான் பராக் ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் சர்மா, ஹசரங்காவை பயன்படுத்தினார். அவரே பந்தும் வீசினார். ஆனாலும் அவர்களால் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் ரகுவன்ஷியும் தனது பங்கிற்கு பவுண்டரிகள் விளாச ஆட்டம் முழுவதும் கொல்கத்தா கட்டுப்பாட்டில் வந்தது.
கொல்கத்தா முதல் வெற்றி:
கொல்கத்தாவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது டி காக்கின் சதத்திற்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், அவர் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அப்போது ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கும், 2வது பந்தை சிக்ஸருக்கும் விளாசினார். டி காக்கின் சதத்திற்கு 9 ரன்கள் தேவைப்பட்டபோது வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அப்போது ஒரு சிக்ஸர் அடித்து கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கொல்கத்தா 17.3 ஓவர்களில் 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டி காக் 61 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ரகுவன்ஷி 17 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் ரியான் பராக் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆர்ச்சர் 2.3 ஓவர்கள் மட்டுமே வீசி 33 ரன்களை வாரி வழங்கினார். ஆர்ச்சரின் பந்துவீச்சு ராஜஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.




















