CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
சிபிஎஸ்இ காலத்துக்கு ஏற்ப புதுப்புது சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சிபிஎஸ்இ-ன் 140-வது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

2025- 26ஆம் கல்வி ஆண்டில் இருந்து பொதுத் தேர்வில் முக்கிய சீர்திருத்தங்களை சிபிஎஸ்இ அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி 12-ம் வகுப்பு கணக்குப் பதிவியல் மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
சிபிஎஸ்இ காலத்துக்கு ஏற்ப புதுப்புது சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சிபிஎஸ்இ-ன் 140-வது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதி
ஏற்கெனவே 10, 12ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் கால்குலேட்டரை பயன்படுத்திக்கொள்ள சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. அதேபோல, 2021-ல் சிஐஎஸ்இசி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதி அளித்தது.
12ஆம் வகுப்பு கணக்குப் பதிவியல் தேர்வில், அடிப்படை கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் சதவீதக் கணக்கீட்டுக்காக மட்டும் கால்குலேட்டரைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்களின் அழுத்தம் குறைந்து, தேர்வு திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் மதிப்பீட்டு முறை
அதேபோல டிஜிட்டல் மதிப்பீட்டு முறையும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் மதிப்பீட்டு முறை On-Screen Marking (OSM) செயல்படுத்தப்படும். இதன்படி விடைத்தாள்கள் மதிப்பீட்டுக்காக ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். இது விரைவான மற்றும் திறமையான மதிப்பீட்டு நடைமுறையை உறுதிப்படுத்தும். இந்த ஆண்டிலேயே டிஜிட்டல் மதிப்பீட்டு முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது 2024-25ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அறிவியல், கணிதம் பாடங்களுக்கான துணைத் தேர்வுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு டிஜிட்டல் மதிப்பீட்டை சிபிஎஸ்இ ஆட்சி மன்றக் குழு அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய மறு மதிப்பீடு
கூடுதலாக தங்களின் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு புதிய மறு மதிப்பீட்டு நடைமுறை அமலாக உள்ளது. இதன்மூலம் வெளிப்படைத்தன்மை மேம்படும். இது நியாயமான மதிப்பீட்டு முறையை உறுதி செய்யும்.
தொழில் பாடங்களுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்
திறன் அடிப்படையிலான (தொழில்) பாடங்களில் ( skill-based vocational subjects) பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறையில் மாற்றம் செய்யவும் சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல 2026- 27ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நிலையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகளை ஒரே நாளில் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

