வேட்டி, சேலை உற்பத்திக்கான 30 சதவீத கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும் - விசைத்தறி சங்கம் கோரிக்கை
கைத்தறி துறை மானிய கோரிக்கையில் இலவச வேட்டி சேலை உற்பத்தி உண்டான கூலி உயர்வையும் வழங்கி விசைத்தறியாளர்களின் வாழ்வில் மேன்மை ஏற்படுத்த வேண்டும் என முதல்வருக்கு கடிதம்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வருகின்ற 28ஆம் தேதி கைத்தறி துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளது, "தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழிலில் 5.4 லட்சம் மேற்பட்ட விசைத்திறியில் மூலம் 30 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக் கொண்டுள்ளார்கள். விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு இந்த வருடம் நிதிநிலை அறிக்கையில் முதற்கட்டமாக 3000 விசைத்தறிகளை நவீனமாக்க முப்பது கோடி ஒதுக்கியும், கூட்டுக்குழுமம், skill devoplment மற்றும் கணினி மேம்பாடு செய்ய 20 கோடி ஒதுக்கியும், தொழில்நுட்ப மற்றும் ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க 15 கோடியும், 2026 பொங்கல் வேஷ்டி சேலை உற்பத்திக்கு 673 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர் அவர்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழக அரசின் சார்பில் 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் தொடக்க சங்க மூலம் 68,000 க்கு மேற்பட்ட விசைத்தறிகள் தமிழக அரசின் வேட்டி சேலை திட்டம், பள்ளி சீருடை திட்டம் மூலம் நெசவு செய்து வருகிறார்கள். தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி திட்டம் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் பெற்று வருகிறார்கள். தற்போது உள்ள தரம் மற்றும் வடிவத்தில் வேட்டி சேலை 2010-2011 ஆரம்பித்த வருடத்தில் வேட்டி உற்பத்திக்கு 16.00 ரூபாயும், சேலை உற்பத்திக்கு ரூபாய் 28.16 பைசா. 2011-2012 ஆம் ஆண்டு வேட்டி உற்பத்திக்கு ரூபாய் 18.40 பைசா, சேலைக்கு ரூபாய் 31.68பைசா. 2012 -2013ஆம் ஆண்டு வேட்டிக்கு ரூபாய் 20.40 பைசா, சேலைக்கு ரூபாய் 31.68 பைசா. அதனைத் தொடர்ந்து, கடந்த 2015-16 ஆம் ஆண்டு வேட்டிக்கு 21.60 ரூபாய், சேலைக்கு ரூபாய் 39.27 பைசா என்ற கூலி உற்பத்திக்கு நெசவாளருக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆண்டு வேட்டிக்கு ரூபாய் 24.00, சேலைக்கான உற்பத்தி கூலி ரூபாய் 43.01 என்று உயர்த்திக் கொடுக்கப்பட்டது. அதன்பின் தற்போது வரை கூலி உயர்வு உயர்த்தப்படவில்லை.
தமிழக அரசின் தேர்தல் அறிவிப்பில் எண் 146 தெரிவித்தது போல விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசும் அளிக்கும் என்ற வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் கடந்த 6 வருடத்திற்கு முன் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி திட்டத்திற்கு கூலி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் எவ்வித கூலியில் மாற்றமில்லை, ஆனால் தற்போது கால சூழலுக்கும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப விசைத்தறி தொழில் சார்ந்த அனைத்து நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு, குடோன் வாடகை, மின்சார கட்டணம், விசைத்தறி சார்ந்த உதிரி பாகங்கள் விலை உயர்வு, எலக்ட்ரானிக் பொருட்கள் விலை உயர்வு, எங்கள் துறை சார்ந்த நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வரும் தச்சு வேலைப்பாடு செய்பவர்கள், லேத் வேலைப்பாடு செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உணவு சார்ந்த அனைத்து துறையிலும் தங்களுடைய கூலியை உயர்த்தி உள்ளார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் 2019 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட கூலியை வைத்து விசைத்தறி நெசவாளர்கள் வேட்டி சேலை உற்பத்தி செய்வது என்பது சற்று கடினமான பொருளாதார சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு விசைத்தறி நெசவாளர்களின் நலனை பெரிதும் போற்றும் வகையில் ஏற்றப்பட்ட மின் கட்டணத்தை குறைத்தும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது போல் 750 இலிருந்து 1000 யூனிட் மின்சார சலுகை அளித்தும் எங்கள் வாழ்வாதாரத்தை காத்தது போல், தற்போது விசைத்தறியில் நெசவு செய்யப்படும் தமிழக அரசின் வேட்டி சேலை திட்டத்திற்கு 30 சதவீத கூலி உயர்வு உயர்த்தி கொடுக்குமாறும், மேலும் பொதுமக்களின் நலனுக்காக என்பதை விட விசைத்தறியாளர்களின் நலனுக்காகவே செயல்படுத்தப்படும். இந்த விலையில்லா வேட்டி சேலை திட்டம் விசைத்தறியாளர்கள், கூட்டுறவு நெசவாளர்கள், அல்லாமல் பலர் ஆதாயம் அடைவதை தவிர்த்து, இதனையே நம்பி இருக்கும் நெசவாளர்களுக்கு வாழ்வளிப்பதோடு, விசைத்தறியாளர்களும் கூட்டுறவு சங்க நெசவாளர்களும், இதன் பலன் முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்துவதோடு. வருகின்ற 28ஆம் தேதி நடைபெறும் கைத்தறி துறை மானிய கோரிக்கையில் இலவச வேட்டி சேலை உற்பத்தி உண்டான கூலி உயர்வையும் வழங்கி விசைத்தறியாளர்களின் வாழ்வில் மேன்மை ஏற்படுத்த வேண்டுகிறோம். விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மொத்த உற்பத்தி செலவில் 30 சதவீத கூலியை உயர்த்தி கொடுக்க ஆவணம் செய்யுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களில் கூட்டமைப்பின் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்" என கடிதம் அனுப்பினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

