Board Exams: பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு: கடும் எச்சரிக்கை விடுத்த கல்வித்துறை
Board Exams 2025: மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்வி வழங்குவதோடு ஆண்டு இறுதித் தேர்வினை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 முதல் 8ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் வினாத்தாள்கள் சமூக ஊடகத்தில் முன்கூட்டியே வெளியானால் ஒழுங்கு நடவடிக்கை என்று தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வினாத்தாள்கள் விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகத்தில் முன்கூட்டியே வெளியானால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு 08.04.2025 முதல் 24.04.2025 வரை அட்டவணையில் குறிப்பிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
நடப்புக் கல்வியாண்டில் டிசம்பர் மாதம் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெற்றபோது ஒரு சில மாவட்டங்களில் தேர்வு வினாத்தாட்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகத்தில் ஆசிரியர்களின் வழியாக பொதுவெளியில் பரவியது கண்டறியப்பட்டு அவ்வாசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிகள்
எனவே, 08.04.2025 முதல் 24.04.2025 வரை நடைபெற உள்ள ஆண்டு இறுதி தேர்வுகளின்போது நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுக்குரிய வினாத்தாட்களை பள்ளியின் EMIS உள்நுழைவின் வழியாக சென்று பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போதும் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவையான வினாத்தாட்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வாயிலாக EMIS உள் நுழைவில் இருந்து பதிவிறக்கம் செய்து மாணவர் எண்ணிக்கை / பள்ளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிகள் எடுக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வினாத்தாட்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகாத வகையில் கவனத்துடன் செயல்பட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கட்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இனிவரும் காலங்களில் வினாத்தாட்கள் கசிவு முன்கூட்டியே வெளியானால் வெளியிடப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் / பிற ஆசிரியர்கள் அவ்வொன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த வட்டக் கல்வி அலுவலர் தொடக்கக் கல்வித் துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே தேர்வு பணிகளில் கணக்கம் இல்லாமல் கவனமாக செயல்பட தேவையான அறியுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்வி வழங்குவதோடு ஆண்டு இறுதித் தேர்வினை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

