Rohit Sharma: ”திரும்பவும் நான் தான்” - இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் ரோகித் கேப்டன்சி? பிசிசிஐ முக்கிய முடிவு
Rohit Sharma: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தான் கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Rohit Sharma: இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் ஜுன் மாதம் 20ம் தேதி தொடங்க உள்ளது.
மீண்டும் டெஸ்ட் கேப்டனாகும் ரோகித்:
ஆஸ்திரேலியாவில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியை ரோகித் சர்மாவே வழிநடத்துவார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் தோல்வி மற்றும் வீரராகவும் மோசமான செயல்பாடு இருந்தபோதிலும், இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் சொதப்பல்:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவின் செயல்பாடு கேப்டனாகவும், வீரராகவும் பெரிதாக ஈர்க்கவில்லை. அவர் 3 போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி, அணியை வழிநடத்தும் வாய்ப்பை பும்ராவிடம் வழங்கினார். முன்னதாக உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என இழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் குவிந்தாலும், 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியைத் தொடர்ந்து, தேர்வுக்குழு அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் அவருடைய செயல்பாடும் கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி அறிவிப்பு எப்போது?
ஐபிஎல் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மே 25ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், போட்டியின் இறுதி வாரத்தில் இங்கிலாந்து தொடருக்கான அணி குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு அறிவிக்கலாம். குறிப்பாக ஐபிஎல் நாக் அவுட்களுக்கு முன்னதாகவோ அல்லது அந்தப் போட்டிகளுக்குப் பிறகோ அணி அறிவிக்கப்படலாம். இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக, மே-ஜூன் மாதங்களில் லயன்ஸ் அணியுடன் 2, நான்கு நாள் போட்டிகளில் விளையாடும் 'ஏ' அணியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் சிலர் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் நடைபெறும் முதல் டெஸ்டுடன் இங்கிலாந்துக்கான 45 நாள் பயணத்தை இந்தியா தொடங்கும். அதைதொடர்ந்து, ஜுலை 2ம் தேதி பர்மிங்ஹாமில் இரண்டாவது போட்டியும், ஜுலை 10ம் தேதி லண்டனில் (லார்ட்ஸ்) மூன்றாவது போட்டியும், ஜுலை 23ம் தேதி மான்செஸ்டரில் நான்காவது போட்டியும், ஜுலை 31ம் தேதி கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி லண்டன் (கென்னிங்டன் ஓவல்) மைதானத்திலும் நடைபெற உள்ளது.




















