நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
"இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய காதல் ஜோடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது"
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள நான்கு வழிச்சாலை அணுகு சாலையில் செல்வதற்கு பதிலாக வாலிபர் ஒருவர் இளம் பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் முக்கிய சாலையில் எதிர்வழியில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி தூத்துக்குடி நோக்கி வந்த டேங்கர் லாரியின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து நாங்கு நேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்ன குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இறந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவர் குறித்து விசாரணை மேற்க்கொண்டதில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தை சேர்ந்தவர் சாலமன்(26), இராதாபுரம் அருகே உள்ள பழவூர் கிராமத்தை சேர்ந்த மதுமிதா(19) என தெரிய வந்துள்ளது. இருவரும் வள்ளியூரில் உள்ள பிரபல ஜவுளி கடையில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். மேலும் அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் உல்லாசமாக சென்று பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் தான் இன்று பிற்பகல் இருவரும் வேலைக்கு செல்லாமல் இருசக்கர வாகனத்தில் நாங்குநேரி அருகே நம்பிநகர் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சிறிது நேரத்தில் இருவரும் அதே இருசக்கர வாகனத்தில் வள்ளியூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது நாங்குநேரி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள நான்கு வழிச் சாலையில் அணுகு சாலையில் செல்வதற்கு பதிலாக தவறுதலாக முக்கிய சாலையில் எதிர்வழியில் சென்றுள்ளனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் உயிரிழந்த இருவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லாரியை ஒட்டி வந்த டிரைவர் கேரள மாவட்டம் திருச்சூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேர்மன்(37) என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் மீது இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேலைக்கு செல்லாமல் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றிய காதல் ஜோடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.