Erode East Election: நாளை மறுநாள் தேர்தல்; இன்று மாலையுடன் ஓயும் பிரச்சாரம் - சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது.

Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் கடந்தாண்டு காலமானதைத் தொடர்ந்து இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இன்றுடன் ஓய்கிறது பரப்புரை:
இதன்படி, நாளை மறுநாள் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் நாம் தமிழர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
தி.மு.க. சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். மொத்தம் 46 பேர் வேட்பாளர்களாக இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் பரப்புரையத் தொடங்கினர்.
தி.மு.க. - நாம் தமிழர்
இன்று மாலையுடன் பரப்புரை ஓய உள்ளதால் இன்று முழுவதும் இரண்டு கட்சியினரும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட உள்ளனர். இந்த தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது. பா.ஜ.க.வும் தாங்கள் போட்டியிடவில்லை என்று அறிவித்து உள்ளனர்.
தி.மு.க., மற்றும் நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகளே மோத உள்ள நிலையில், இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு தி.மு.க.விற்கே அதிகம் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள சந்திரகுமார் இந்த தொகுதியில் 2011 -16 காலகட்டத்தில் தேமுதிக-விற்காக எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர். பின்னர், 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் வசம் இருந்த இந்த தொகுதியில் மீண்டும் தி.மு.க.வே நேரடியாக களமிறங்கியுள்ளது.
நாளை மறுநாள் தேர்தல்:
நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முழு ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் இன்று மாலைக்கு பிறகு வெளியேறுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடிகள் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேர்தல் நாளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் தி.மு.க. களமிறங்கியுள்ளது.





















