பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பிப்ரவரி 22 முதல் 28ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிப்ரவரி 22 முதல் 28ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசு, 2011-12 ஆம் கல்வி ஆண்டு முதல் புதிய பொதுப்பாடத் திட்டத்தினை (சமச்சீர்கல்வி) அறிமுகப்படுத்தி உள்ளதால், மார்ச் 2012 முதல் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்விற்கு 75 மதிப்பெண்களும் செய்முறைத் தேர்விற்கு 25 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு கீழ்க்கண்டவாறு அமையும்.
இயல் அறிவியல்
இயற்பியல் மற்றும் வேதியியல் – 1 மணி நேரம்
உயிர் அறிவியல்
தாவரவியல் மற்றும் விலங்கியல் - 1 மணி நேரம்
அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்விற்கு 2 மணி நேரம்
செய்முறைத் தேர்வு காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இரு வேளைகளில் நடத்தப்பட வேண்டும்.
செய்முறைத் தேர்வு வினாக்கள் மற்றும் மதிப்பெண்கள்
செய்முறைக்கென பாடப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள வினாக்களிலிருந்து கீழ்வருமாறு மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இயல் அறிவியலில்:
இயற்பியல் - ஒரு வினா - 5 மதிப்பெண்
வேதியியல் - ஒரு வினா - 5 மதிப்பெண்
-2 வினா - மொத்தம் 10 மதிப்பெண்கள்
உயிர் அறிவியலில்:
தாவரவியல் - ஒரு வினா - 5 மதிப்பெண்
விலங்கியல் - ஒரு வினா - 5 மதிப்பெண்
- 2 வினா - மொத்தம் 10 மதிப்பெண்கள்
எனவே மொத்தம் 20 மதிப்பெண்களுக்கு விடையளிக்க வேண்டும்.
மதிப்பெண் நிர்ணயம் எப்படி?
விடையளிக்க வேண்டிய வினாக்களை மாணவர்களாகவே, செய்முறை ஆய்வு கையேட்டில் உள்ள தொகுப்பிலிருந்து மந்தண முறையில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். கணக்கீடு வினாக்களுக்கு ஒரு கணக்கீடு எடுத்தால் போதுமானது.
அகமதிப்பீடு:
மாணவர்கள் ஆய்வுக்கூட வருகை – 1 மதிப்பெண்
மாணவர் ஆய்வக செயல்திறன் – 1 மதிப்பெண்
மாணவர் ஆய்வக ஈடுபாடு – 1 மதிப்பெண்
ஆய்வக பதிவுக் குறிப்பேடு – 2 மதிப்பெண்கள்
மொத்தம் – 5 மதிப்பெண்கள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் - கருத்தியலில் 75 மதிப்பெண்களில் 20 மதிப்பெண்களும் மற்றும் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் விருப்பப்படின், செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரி சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் கடிதம் சமர்ப்பித்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். விலக்கு கோரும் தேர்வர்களின் கோரிக்கைக் கடிதங்களை பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டக் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலரிடம் ஒப்படைக்க செய்முறைத் தேர்வு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

