Saif Ali Khan Case: வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்....
என் வேலை போச்சு.. என் கல்யாணம் போச்சு... மொத்தத்துல என் வாழ்க்கையே பேச்சு, எனக்கு நீதி வேண்டும் என சைஃப் அலிகான் வழக்கில் தவறாக கைதாகி விடுதலையானவர் கேட்டுள்ளார்.

மும்பையில், பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சியை வைத்து, முதலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன் வேறு ஒருவரை, அதாவது உண்மையான குற்றவாளியை கைது செய்த போலீசார், ஏற்கனவே தவறாக கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்தனர். அவர் தற்போது, நீதி கேட்டு பேட்டியளித்துள்ளார்.
சைஃப் தாக்கப்பட்ட வழக்கில் தவறான நபர் கைது
மும்பையில் நடிகர் சைஃப் அலி கான் தாக்கப்பட்டபோது, முதல் ஆதாரமாக ஒரு சிசிடிவி காட்சி வெளியானது. அதில், சைஃப்பின் அடுக்குமாடி குடியிருப்பின் படிகளில் முதுகுப்புறத்தில் பை மாட்டிக்கொண்டு ஒருவர் இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்தான், சைஃப் அலி கானை தாக்கியவர் என கூறப்பட்டது. இந்நிலையில், அந்த நபரின் அங்க அடையாளங்களைக்கொண்டு, மும்பை தனிப்படை போலீசார் ஆகாஷ் கைலாஷ் கனோஜியா என்ற 31 வயது நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். பின்னர், சைஃப் வீட்டில் பதிவான கைரேகைகள் ஒத்துப்போகாததால், அவர் தவறாக கைது செய்யப்பட்டதாக கூறி விடுதலை செய்யப்பட்டார்.
வேலை, கல்யாணம் எல்லாம் போச்சு - ஆகாஷ்
சைஃப் வழக்கில் முதலில் கைதான ஆகாஷ், கைது செய்யப்பட்ட அன்று, தன்னுடைய சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊருக்கு, உடல்நிலை சரியில்லாத பாட்டியையும், தான் கல்யாணம் செய்துகொள்ள இருந்த பெண்ணையும் பார்க்க சென்று கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது, துர்க் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு போலீசார் தன்னை கைது செய்ததாகவும், பின்னர் மும்பை போலீசார் அங்கு வந்து தன்னை தாக்கியதாகவும் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கைதின்போது, தன்னுடைய புகைப்படத்துடன் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால், தன்னுடைய குடும்பமே அவமானமடைந்ததாகவும், தான் பார்க்க இருந்த பெண்ணின் வீட்டாரும் அவரை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் ஆகாஷ் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அதோடு, தான் வேலை செய்யும் இடத்தில், தன்னுடைய விளக்கத்தை கேட்க மறுத்து, அவரை வேலையை விட்டு துரத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
போலீசார் மிகவும் அவசரப்பட்டுவிட்டதாகவும், சிசிடிவியில் இருந்தவருக்கு மீசை இல்லாத நிலையில், தான் மீசை வைத்திருப்பதைக்கூட போலீசார் கவனிக்கவில்லை என கூறியுள்ளார் ஆகாஷ். நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம், தனது வாழ்க்கையையே சிதைத்து விட்டதாகவும், தான் எல்லாவற்றையும் இழந்து விட்டதால், சைஃப் அலி கான் வீட்டின் முன்பு நின்று வேலை கேட்கப்போவதாகவும் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

