U19 Womens WC Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
IND vs SA, U19 Womens World Cup Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

U19 மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய இளம் மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இன்று(02.02.25) நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டாம் முறையாக உலகக்கோப்பையை வென்றது.
தென்னாப்பிரிக்க அணியை சுருட்டிய இந்திய அணி
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்த களமிறங்கிய அந்த அணி வீராங்கனைகள், இந்திய மிகளிர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இறுதியில், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி, 82 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்களை அடித்தார்.
இந்திய அணியின் தரப்பில் கொங்காடி த்ரிஷா 3 விக்கெட்டுகளையும், பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலக்கை அசால்டாக எட்டி சாம்பியனான இந்திய அணி
இதைத் தொடர்ந்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி வீராங்கனைகள் களமிறங்கினர். தொடக்க ஆட்டர்காரர்களாக கமாலினியும், கொங்காடி த்ரிஷாவும் களமிறங்கிய நிலையில், 8 ரன்கள் எடுத்து கமாலினி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சனிகா ச்சல்கே களமிறங்கினார். அவரும் த்ரிஷாவும் இணைந்து அதிரடியாக ஆடி, 11.2 ஓவர்களில் அசால்டாக வெற்றி இலக்கை எட்டினர். இதையடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி இரண்டாவது முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கொங்காடி த்ரிஷா 33 பந்துகளில் 44 ரன்களும், சனிகா ச்சல்கே 22 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 44 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய கொங்காடி த்ரிஷா ஆட்டநாயகியாகவும், தொடரின் நாயகியாவும் தேர்வாகி அசத்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

