Nitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜக
வாரிசு அரசியலை வைத்து எதிர்க்கட்சிகளை பாஜக டார்கெட் செய்து வரும் நேரத்தில், கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் தனது மகனை அரசியலில் இறக்க ரெடியாகி வருகிறார். பீகார் அரசியலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடையிலான புகைச்சலுக்கு நடுவே நிதிஷ் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார்.
பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதே வேலைகள் வேகமெடுத்துள்ளன. பீகாரை தனது கோட்டையாக வைத்திருக்கும் நிதிஷ் குமார், பாஜகவுடன் முட்டி மோதியாவது இந்த முறையும் முதலமைச்சர் சீட்டை வாங்கிவிட வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். கடந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றும் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த பாஜக, இந்த முறை எங்களால் முடியவே முடியாது என போட்டி போடுவதாக சொல்கின்றனர்.
இந்தநிலையில் நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் அரசியல் எண்ட்ரிக்கு தயாராகி வருகிறார். நிஷாந்த் இத்தனை காலமாக அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாமல் ஒதுங்கி வந்தார். அரசியலுக்கு வரும் ஐடியா இருக்கிறதா என்று கேட்கும் போதெல்லாம் அதில் எனக்கு விருப்பம் இல்லை, ஆன்மிகத்தில் தான் விருப்பம் என சொல்லி வந்தார்.
இந்தநிலையில் ஜனவரி 8ம் தேதி சுதந்திர போராட்ட வீரர்களுக்கான சிலை திறப்பு விழாவில் நிதுஷ் குமாருடன் சேர்ந்து அவரது மகனும் கலந்து கொண்டார். அரசு தொடர்பான நிகழ்ச்சி என்றால் 2015ல் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவுக்கு மட்டுமே அவரது மகன் வந்துள்ளார். தற்போது திடீரென பொதுவெளியில் தலைகாட்டுவது அரசியல் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.
49 வயதான நிஷாந்த் குமாருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாகவும், நிதிஷ் குமாரின் க்ரீன் சிக்னலுக்காக காத்திருப்பதாகவும் ஐக்கிய ஜனதா தளம் வட்டாரத்தில் சொல்கின்றனர். அவர் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அதனை வைத்து பாஜகவை டார்கெட் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர். வாரிசு அரசியலை வைத்து பாஜக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பீகார் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக வாரிசு அரசியலை கையில் எடுக்கவிருக்கின்றனர் எதிர்க்கட்சிகள். ஏற்கனவே முதலமைச்சர் பதவி விவகாரத்தில் பாஜகவை நெருக்கும் நிதிஷ் குமார், அடுத்ததாக தனது மகனை வைத்தும் ஆட்டம் காட்ட தயாராகி வருகிறார்.






















