Mohamed Shanavas MLA | நாகையின் மொத்த கோரிக்கையையும் ஒரே மூச்சில் அடுக்கிய ஷாநவாஸ்..
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதை நான் கொடுத்திருக்கிறேன். எனவே, அங்கே ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை தொடங்கவேண்டும்.
26-08-2021 அன்று, சட்டமன்றப் பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில், நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகம்மது ஷா நவாஸ் பேசியதிலிருந்து, "மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே! நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த சில கோரிக்கைகளை இங்கே வைக்கிறேன். நாகப்பட்டினம் தொகுதியில் சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சியில் ஒரேயொரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட இல்லை. ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதை நான் கொடுத்திருக்கிறேன். எனவே, அங்கே ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை தொடங்கவேண்டும்.
நாகப்பட்டினம் தொகுதி பாலையூர் ஊராட்சிக்குட்பட்ட அழிஞ்சமங்கலம் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தப்பள்ளிக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு. எனவே, அந்த நூற்றாண்டை கருத்தில் கொண்டு, அந்த உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தித் தர வேண்டும். 154 ஆண்டுகள் பழமையான நகராட்சி நாகப்பட்டினம் நகராட்சி. அந்த நகராட்சி முற்றிலும் சீர்குலைந்து கிடக்கிறது. அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட அங்கே நடைபெறவில்லை. மிகப்பெரிய அளவிற்கு ஒரு சிறப்பு நிதி ஒதுக்கினால் மட்டும்தான் நாகப்பட்டினம் தலைநிமிர முடியும். நாகப்பட்டினத்திற்கு உள்ளடங்கிய பகுதிதான் நமது திருக்குவளை கிராமம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் அந்தக் கிராமம் இருக்கிறது. அத்தகைய சிறப்புபெற்ற நாகப்பட்டினத்தில் பல சமய மக்களும் வந்து செல்லக்கூடிய இடமாக நாகூர் தர்கா இருக்கிறது. வேளாங்கண்ணி ஆலயம் இருக்கிறது. சிக்கல் சிங்காரவேலர் கோவில் இருக்கிறது. எனவே, நாகப்பட்டினத்தினுடைய மேம்பாட்டுக்காக சிறப்பு நிதியை நாகப்பட்டினம் நகராட்சிக்குத் தர வேண்டும்.
திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் கட்டிமுடிக்கப்பட்டும், இதர உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவடையாததால், அது திறக்கப்படாமலேயே இருக்கிறது. எனவே அந்த உள்கட்டமைப்புப் பணிகளை முடித்து விரைந்து அதைத் திறக்க வேண்டும். நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனை, நாகூர் அரசு மருத்துவமனை ஆகியவை முற்றிலும் சீர்குலைந்து கிடக்கின்றன. அம்மருத்துவமனைகளில் உரிய பணிகள் நடைபெறுவதில்லை. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அவற்றை உரிய சிறப்பான பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கான கட்டடங்களை கட்ட வேண்டும்.
மேலும், திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், நேற்று கூட அங்கு ஒரு விபத்து நேர்ந்திருக்கிறது. திட்டச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கூரை காரை இடிந்து விழுந்து அங்கு பணியாற்றிய மருத்துவப் பணியாளர் காயம்பட்டிருக்கிறார். எனவே, அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டி, அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், திருமருகல், திருக்கண்ணபுரம், கணபதிபுரம், தேமங்கலம், ஏனங்குடி, திருப்பயத்தான்குடி, ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
6 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக் கிடக்கும் அம்பல் ஆரம்ப சுகாதார நிலையத்தை புதிய கட்டடம் கட்டி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அருண்மொழித்தேவன் துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட TTDC க்கு சொந்தமான பயன்பாடு இல்லாத நிலத்தில் யூரியா உரக்கிடங்கு அமைக்கப்பட வேண்டும்.
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை இரயில்வே மேம்பாலப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. அதை விரைந்து முடிக்க வேண்டும். நாகப்பட்டினம் மற்றும் நாகூர் கடற்கரைகளை சீரமைத்து மேம்படுத்திட வேண்டும். வெண்ணாறு வடிநிலம் மற்றும் காவிரி கோட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். நாகப்பட்டினத்தில் புதிதாக ஒரு நெல் விதைப்பண்ணை அமைக்கப்பட வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் முதல் கோடியக்கரை வரை உள்ள கடற்கரைகளில் பாறைக்கற்களை கொட்டி, கடலரிப்பை தடுக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தான் பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். பேரிடர் காலத்தில் பெரிதும் பாதிக்கப்படும் பகுதியாக நாகப்பட்டினம் உள்ளதால், அங்கு மின்கம்பிகளை நிலத்திற்கு அடியில் அமைக்கும் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். நாகூர் அருகில் புதிதாக துணை மின் நிலையம் அமைத்துத் தர வேண்டும். நாகப்பட்டினத்தில் தமிழறிஞர் மறைமலை அடிகள் அவர்களுக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்ட வேண்டும். நாகப்பட்டினம் தஞ்சாவூர் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாகவே அமைத்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களை புதிதாகக் கட்டுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன். நன்றி வணக்கம்" என்றார்.