“மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவு”- அன்புமணி குற்றச்சாட்டு
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அளக்குடி கிராமத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த அதிமுக, திமுக ஆட்சிக்காலத்தில் அக்கறை ஜெயகொண்டபட்டினம்-அளக்குடி இடையே தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகும் விதை தடுக்கும் விதமாக ஆலங்குடி பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட கால கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் சுமார் 72 கிலோ மீட்டர் அளவிற்கு கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு இப்பகுதியில் போராட்டம் நடத்தினேன். அதன் விளைவாக ஆதனூர் குமாரமங்கலம் இடையே ஒரேயொரு தடுப்பணை அறிவித்தது. தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் இப்பகுதியில் தடுப்பணை கட்டுவது தொடர்பான ரூ.580 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக இதனை தொடங்க வேண்டும்.
மேலும், கொள்ளிடம் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகள் இடையே அதிகளவில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று ஒரு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருந்தார்கள். இதில் கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பாக கொடுத்த திட்ட அறிக்கையை விவாதிக்க திட்டமிட்டிருந்தனர். இந்த கூட்டம் இருபத்தி மூன்றாம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தடை வாங்க வேண்டும். ஏனென்றால், இது சட்டத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் காவிரிப் படுகையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. இதனை விவாதிக்க காவிரி நீர் மேலாண்மைக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருப்பதால் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என குற்றம்சாட்டினர்.
மேலும் தொடர்ந்து பேசியவர், “கொள்ளிடம் ஆற்றில் முன்பு 60, 70 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டது. அப்போது எனது தலைமையில் பெரிய போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இருந்து மணல் எடுக்கக்கூடாது, எடுக்கவும் விடமாட்டேன், தேவைப்பட்டால் நானே வந்து போராடுவேன்” என்றார்.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு பாமக நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் கிடங்கு அமைந்து விற்பனை செய்யப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? “சும்மா இதுபோன்று பேச கூடாது” என செய்தியாளரிடம் கோபப்பட்ட அன்புமணி ராமதாஸ், மணல் எடுப்பவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.