முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் தர்ணா போராட்டம் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ போது மனு கொடுக்க காவல்துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்த நிலையில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இருநாள் சுற்றுப்பயணமாக இன்று வருகை புரிந்தார். அவரது வருகையால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது
வரவேற்பு மற்றும் கலைஞர் சிலை திறப்பு
மயிலாடுதுறை மாவட்ட நுழைவு எல்லையான கொள்ளிடத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சோதியகுடியில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் மீதான மக்களின் அன்பையும் மரியாதையையும் பறைசாற்றும் வகையில், திரளானோர் திரண்டிருந்தனர்.

திமுக கொடியேற்று விழாவில் உணர்ச்சிமிகு தருணம்
சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து, 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அப்போது, கொடிக்கம்பத்தில் பொருத்தப்பட்ட தானியங்கி மோட்டார் இயங்காததால், அங்கிருந்த திமுக தொண்டர்கள் இரும்பு கொடி கம்பியை வெறும் கையால் உணர்ச்சிபொங்க இழுத்து ஏற்றி வைத்தனர். இது திமுக தொண்டர்களின் கட்சிப் பற்றையும், முதலமைச்சர் மீதான அவர்களது பற்றுதலையும் வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இந்த நிகழ்வு கூட்டத்தினர் மத்தியில் பெரும் கரவொலியைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மதியம் முதல்வர் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் பூர்விக இல்லத்திற்கு சென்று உணவு உண்டு ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அருகில் உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ வெங்கலச்சிலையை திறந்து வைத்து அங்கே அமைக்கபட்டிருந்த 60 அடி கொடிக்கம்பத்தில் திமுக கொடியினை ஏற்றினார். அங்கிருந்தே மயிலாடுதுறை நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டு சென்று மணக்குடி பகுதியில் இருந்து ரோடு ஷோவில் தனது நடை பயணத்தை தொடங்கினார். மயிலாடுதுறை நகரில் முக்கிய வீதிகளில் ரோடு ஷோவில் நடத்துகிறார்.

விவசாயிகள் தர்ணா
இந்நிலையில் அப்போது அவரை சந்தித்து மனு அளிப்பதற்காக பல்வேறு விவசாய சங்கத்தினர் மயிலாடுதுறை நகரில் நுழைவுப் பகுதியான கால் டாக்ஸி பகுதியில் காத்திருந்தனர். கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், தற்பொழுது அறிவித்துள்ள குருவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு மட்டும் விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கப்படுவதாகவும் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று மனு அளிப்பதற்காக விவசாய சங்கத்தினர் முதல்வர் வரும் வழியில் காத்திருந்தனர்.

அவர்களை ரோடு ஷோ நடைபெறும் இடத்தில், மனு கொடுக்கும் பகுதியில் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதனை அடுத்து விவசாய சங்கத்தினர் சாலைகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் முதல்வர் வரும்போது மனு கொடுக்க அனுமதிப்பதாக உறுதி அளித்ததின் பெயரில் போராட்டத்தை வாபஸ் வாங்கினர். முதல்வர் ரோடு ஷோ நடைபெறும் பகுதியில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நாளை, ஏவிசி கல்லூரியில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே முடிவடைந்த பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைப்பார். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் உள்ளார். இந்த நிகழ்ச்சிகள் மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















