Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க
கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை ஆண், பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் பிடித்து தள்ளி, தகாத வார்த்தையால் காவல் ஆய்வாளர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூ, சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு, சமீபத்தில் அஜித்குமார் மரணம் என்று காவல்துறையினரின் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பல மறக்க முடியாத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர்:
அந்த வகையில், காவல் ஆய்வாளர் ஒருவர் சாலைமறியலில் ஈடுபடும் பொதுமக்களை ஆண், பெண் என வித்தியாசம் பார்க்காமல் தள்ளிவிட்டு ஒருமையிலும், தகாத வார்த்தைகளாலும் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வெண்ணைமலை. இந்த பகுதியில் வசிப்பவர் முருகராஜ். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் பகுதியில் வசிக்கும் காவ்யா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
View this post on Instagram
காரணம் என்ன?
திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 13ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவ்யாவின் பெற்றோர்களும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
இதனால், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் திடீரென காவ்யாவின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை வாடா, போடா என்று ஒருமையில் பேசியதுடன், தகாத வார்த்தைகளில் திட்டினார்.
வைரலாகும் வீடியோ:
மேலும் ஆண், பெண் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் பொதுமக்களை பிடித்து தள்ளினார். இதை வீடியோ எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனையும் கீழே தட்டிவிட்டார். இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த சம்பவத்தின்போது காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சாலைமறியலை கைவிட வைத்தனர்.
சாலைமறியல் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அதனால் சாலைகளில் வாகனங்களில் காத்திருந்தவர்கள், பேருந்துகளில் சென்ற மற்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே, காவல் ஆய்வாளர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொதுமக்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து காெண்ட காவல் ஆய்வாளர் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ற தகவல் தெரியவில்லை.
காவ்யா முதலில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே முருகராஜ் தரப்பினர் காவ்யாவின் பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர். பின்னர், காவ்யாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வராததே காவ்யாவின் உறவினருக்கு இந்த மரணத்தில் சந்தேகத்தை எழுப்பியது.



















