ரிதன்யா போல் எத்தனை பேர் ?விவாகரத்து என்பது ஒழுக்க மீறலா ? இயக்குநர் பாண்டிராஜ் பேச்சுக்கு கண்டனம்
விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி படத்தின் இயக்குநர் விவாகரத்து பற்றி பேசியுள்ள கருத்திற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

விவாகரத்து பற்றி இயக்குநர் பாண்டிராஜ்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்துள்ள 'தலைவன் தலைவி' திரைப்படம் வரும் ஜூலை 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பாண்டிராஜ் விவாகரத்து குறித்து கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
" தலைவன் தலைவி படத்தில் விவாகரத்தைப் பற்றி கொஞ்சம் பேசியிருக்கிறோம். சமீபத்தில் நிறைய விவாகரத்துகள் நடப்பதை பார்க்கிறோம். அது ஏன் என்கிற கேள்விக்கு இந்த படம் பதில் சொல்லும் என நினைக்கிறேன். கடைகுட்டி சிங்கம் படம் பார்த்துவிட்டு நிறைய பேர் தங்கள் அண்ணன் தங்கைகளுடம் பேசியதாக சொன்னார்கள். அதே போல் இந்த படம் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போகும் கணவன் மனைவிக்கு ஒரு யோசனையைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்" என பாண்டிராஜ் பேசியுள்ளார்."
முதலில் விவாகரத்து என்பது ஒரு திருமண வாழ்க்கையில் சம்பந்தபட்ட இரு நபர்களின் தேர்வு. வாழ்க்கை முழுவது போராட்டங்களை சேர்ந்து சந்தித்து வாழ்ந்த தம்பதிகளும் இருக்கிறார்கள். குரட்டை மாதிரியான சின்ன விஷயத்தை பெரிதாக்கி விவாகரத்து பெறுபவர்களும் இருக்கிறார்கள். இப்படியான நிலையில் இயக்குநர்கள் தாங்களே விவாகரத்து செய்யவிருக்கும் தம்பதிகளை மனமாற்றம் செய்து மீண்டும் சேர்ந்து வாழ வைக்கும் பொறுப்பை ஏன் தலையில் ஏற்றிக் கொள்கிறார்கள். பெண்கள் மீதான அடக்குமுறைகள் , ஆண் பெண் இடையில் மிக நுட்பமாக ஏற்படும் சிக்கல்கள் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் திருமணத்தை கட்டிகாக்க வேண்டும் என்கிற இயக்குநர் பாண்டிராஜின் பொதுப்படையான புரிதல் பிற்போக்குத்தனமானது. இது மறைமுகமாக சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளுக்கும் , பெண்கள் மீதான் ஒடுக்குமுறைகளை ஆதரவு கொடுப்பதாகவே புரிந்துகொள்ள முடியும் .
விவாகரத்து என்பது ஒழுக்க மீறலா ?
பெண்கள் , குறிப்பாக ஆதிக்க சமூகத்தில் பெரும்பாலும் உடைமைகளாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். சாதி மறுப்பு காதல்களுக்கும் திருமணங்களுக்கும் இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முதன்மையான காரணம் தங்களுடைய செல்வமும் நிலமும் பிற சமூகத்தினருக்கு சென்றுவிடக் கூடாது என்பதால் தான். பெற்றோர்களை மீறி ஒரு பையனோ பெண்ணோ திருமணம் செய்துகொண்டாலும் ஒன்று அவர்களை கொலை செய்வார்கள் இல்லையெனில் தங்களிடம் இருந்து எந்த சொத்துக்களையோ கேட்டு வரமாட்டோம் என்று மனமக்களிடம் எழுதி வாங்கிவிடுவார்கள். திருமணம் என்பது மகனைப் பெற்றவர்களுக்கு தனது மகனுக்கு செலவு செய்த முதலீட்டை அசலும் வட்டியுமாக திரும்ப பெறுவது. முழுக்க முழுக்க பெண்ணை மையமாக வைத்து சடங்கு சம்பிரதாயங்களுடன் நடைபெறும் ஒரு வர்த்தகமாகதான் இன்று பெரும்பாலான சமூகத்தில் திருமணம் இருந்து வருகிறது. இப்படியான சூழலில் வளரும் பெண்கள் தங்களுக்கென வகுக்கப்பட்டிருக்கும் சமூக வரம்புகளை மீறுவதை ஒழுக்க மீறலாக பார்க்கிறார்கள். விவாகரத்தும் அப்படியான ஒரு ஒழுக்க மீறலாக தெரிவதால் தான் அத்தனை கொடுமையகளை அனுபவிக்கும் ரிதன்யா போன்ற பெண்கள் தற்கொலையை தங்கள் விடுதலையாக தேர்வு செய்கிறார்கள். அதை அவர்கள் தந்தைகள் பெருமையாகவும் கருதுகிறார்கள்.
விவாகரத்தை நார்மலைஸ் செய்ய வேண்டியது ஏன் அவசியம் ?
ரிதன்யாவின் மரணத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாகரத்தை நார்மலைஸ் செய்ய வேண்டும் என்கிற விவாதம் அதிகரித்துள்ளது. பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் அதில் இருந்து வெளிவருவதற்கான முழு சுதந்திரம் ஒருவருக்கு இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு இருக்கிறது என்றால் கூடுதல் பக்கபலம் தான். அப்படி இல்லையென்றாலும் தனக்காக சந்தோஷமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விரும்புவது எந்த விதத்திலும் ஒழுக்க மீறலாகாது என பல பெண்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம் தான். அதுவே வாழ்க்கை இல்லை. திருமணத்தை எந்த விதத்தில் புனிதப்படுத்துகிறவர்களும் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் மீதும் அவர்களின் உடல் மீதும் காலம் காலமாக சுமத்தப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகளை ஆதரிப்பவர்களே.





















