Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலும், மாநிலங்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் 7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில், கிழக்கு கோதாவரியில் சரக்கு வாகனத்தில் இருந்து 7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்:
ஆந்திர பிரதேச மாநிலத்தில் வரும் 13 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலும் சேர்ந்தே நடைபெறுகிறது. அங்கு ஒய் .எஸ். ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி களம் காண்கின்றன. இந்நிலையில், அங்கு தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் சரக்கு வாகனத்தில் இருந்து சுமார் 7 கோடி மீட்கப்பட்ட சம்பவமானது பேசு பொருளாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், அனந்தபுள்ளி பகுதியில் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி லோடு ஆட்டோவானது, சென்று கொண்டிருந்தது.
வாகன விபத்து:
அப்போது, சரக்கு வாகனம் பின்னால் வந்த லாரி மோதியது. விபத்து நடந்ததையடுத்து அருகில் இருந்த, மக்கள் ஓடோடி வந்து பார்த்தனர். அப்போது, லோடு ஆட்டோவில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை பார்த்து மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். இப்போது சரக்கு வாகனத்தை சோதனை செய்தலில் பல பெட்டிகளில் பணம் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் காவல் நிலையத்துக்கு பணத்தை எடுத்து சோதனை செய்ததில், மொத்தம் 7 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது. பின்னர் இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணம் யாருடையது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Andhra Pradesh: Rs 7 Crores cash, kept in seven boxes, seized in East Godavari district.
— ANI (@ANI) May 11, 2024
A vehicle had overturned after being hit by a lorry at Anantapally in Nallajarla Mandal. Locals noticed that 7 cardboard boxes, containing cash, were being transferred in that… pic.twitter.com/KbQmb5M175
தீவிர விசாரணை:
இதற்கு முன்னதாக , கடந்த மே 9 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள என்.டி.ஆர் மாவட்டத்தில் 8 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவைக்கும் , மக்களவைக்கும் சேர்ந்து நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற பண பறிமுதலானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணமானது, தேர்தல் வாக்குக்காக பணப்பட்டுவாடா செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணத்துக்காக கொண்டு செல்லப்பட்டதா? என்பது விசாரணைக்கு பின்னே தெரிய வரும்.