(Source: ECI | ABP NEWS)
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
ராமதாஸ் அன்புமணி இடையே மோதல் வலுப்பெற்று வரும் நிலையில், இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த கூட்டணி கட்சியான அதிமுக - பாஜக தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க திமுக-வும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுக-வும் தீவிர வியூகம் வகுத்து வருகின்றனர். திமுக தனது கூட்டணியை தக்க வைக்கவும், வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதிமுக பலமான கூட்டணியை அமைக்க ஆயத்தம் காட்டி வருகிறது.
ராமதாஸ் - அன்புமணி மோதல்:
தற்போது அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வும், பாமக-வும் உள்ளனர். கூட்டணியில் பா.ஜ.க.வை விட தமிழ்நாட்டில் மிகப்பெரிய செல்வாக்கும், வாக்கு வங்கியும் கொண்ட கட்சி பாமக. ஆனால், ராமதாஸ்- அன்புமணி மோதலால் தற்போது பாமக பிளவுபட்டு நிற்கிறது. கட்சியை முழுமையாக கைப்பற்ற அன்புமணி டெல்லி வரை சென்றுள்ள நிலையில், அன்புமணியை தன் கட்டுப்பாட்டின் கீழே கொண்டு வர ராமதாசும் மறுபக்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராமதாஸ் - அன்புமணி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாமக தற்போது ராமதாஸ் அணி - அன்புமணி அணி என்று பிளவுபட்டு உள்ளது. இது கட்சியில் யார் செல்வாக்கானவர்கள் என்பதை காட்டுவதற்கு அவர்கள் இருவருக்கும் பலமாக இருந்தாலும், கூட்டணி கட்சியினருக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
பீதியில் கூட்டணி கட்சிகள்:
ராமதாஸ் திமுக பக்கம் சாய்வது போல பிம்பம் உருவாகியிருக்கும் சூழலில், அவரை செல்வப்பெருந்தகை நேரில் சென்று சந்தித்திருப்பது அதிமுக கூட்டணியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் ராமதாஸ் - அன்புமணி இருவரில் ஒருவர் பிரிந்து சென்றாலும் அது அதிமுக கூட்டணியையே பெரிதும் பாதிக்கும்.
இதனால், இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி தங்கள் கூட்டணி பக்கம் ஒன்றிணைந்த பாமக-வாக தங்களுக்கு வலுவாக தோள் கொடுக்க அதிமுக-வும், பா.ஜ.க.வும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.ஏனென்றால், ஆளுங்கட்சியான திமுக பக்கம் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் உள்ளன.
கடும் சவால்:
மேலும், களத்தில் திமுக மட்டுமின்றி போட்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இருப்பதால் அதிமுக தங்கள் கூட்டணியை வலுவாக அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பது அதிமுக-வின் கீழ்மட்ட தொண்டர்கள் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
கூட்டணிக்குள்ளே பல அரசல் புரசல் உள்ள நிலையில், கூட்டணியின் முக்கியமான கட்சியான பாமக உட்கட்சி மோதலால் சிதைவது அவர்கள் மட்டுமின்றி கூட்டணியை மிகவும் பலவீனப்படுத்தி வருகிறது. இதை உடனடியாக சரி செய்து ராமதாஸ் - அன்புமணி இருவரும் இணைந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளும் விரும்புகின்றனர்.





















