அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்
பதவி எதுவும் இல்லாமல் அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் அப்செட்டில் இருப்பதாக பேச்சு அடிபடும் நிலையில், அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு நிச்சயம் வழங்கப்படும் என உறுதி கொடுத்துள்ளார் அமித்ஷா. அதோடு சேர்த்து 2026 தேர்தலை வைத்து அமித்ஷா சில கணக்குகளை போட்டுள்ளதாக சொல்கின்றனர்.
அதிமுக பாஜக கூட்டணி அமையும் போதே பாஜக மாநில தலைவர் பதவியும் அண்ணமலையிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதிமுகவுக்கு நெருக்கமான நயினார் நாகேந்திரனின் கைகளுக்கு அந்த பொறுப்பு சென்றது. அப்போதே அண்ணாமலையின் திறமையை தேசிய கட்டமைப்பில் பாஜக பயன்படுத்தும் என அறிவித்தார் அமைச்சர் அமித்ஷா. நயினார் நாகேந்திரனின் பதவியேற்பு விழாவில் வைத்தே அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகு அண்ணாமலைக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. ஆந்திர பிரதேசத்தில் இருந்த எம்.பி சீட்டுக்கு குறிவைத்து காய் நகர்த்திய அண்ணாமலைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாநில தலைவராக இருந்த போது ஆக்டிவ்வாக இருந்த அண்ணாமலை சைலண்ட் மோடுக்கு போனார். பதவியை பறித்ததால் கடுப்பில் இருந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் கட்சியினரையும், அதிமுக கூட்டணியையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில் DT NEXT-க்கு அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், அண்ணமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என மீண்டும் தெரிவித்துள்ளார். ஆத்திரத்தில் இருந்த அண்ணமலை ஆதரவாளர்களுக்கு இது ஆறுதலை கொடுத்துள்ளது. இருந்தாலும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலையை பயன்படுத்த வேண்டும் என்பதே அமித்ஷாவின் ஐடியாவாக இருப்பதாக சொல்கின்றனர். அண்ணாமலையின் அரசியல் தமிழக பாஜக வாக்கு சதவீதத்தை உயர்த்தியதால், வரும் தேர்தலிலும் அண்ணமலையின் பிரச்சாரம் கைகொடுக்கும் என அமித்ஷா கணக்கு போட்டுள்ளார்.
அதனால் தேர்தலுக்கு முன்பே அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு கொடுத்து பிரச்னையை சரிகட்ட முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர். தேசிய பொறுப்பில் அண்ணமலை இருந்தாலும், மாநில அரசியலிலும் அவரை பயன்படுத்த வேண்டும் என்பதே பாஜக தலைமையின் விருப்பமாக இருப்பதாக கமலாலய வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.





















