சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து ! ஒருவர் பலி.. உடனடியாக நிவாரணம் அறிவித்த முதல்வர்..
சாத்தூர் அருகே உள்ள கீழ தாயில்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர்.

பட்டாசு அலையில் வெடி விபத்து:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை, தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியை தொடங்கிய நேரத்தில், ஒரு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உள்ளே இருந்த பட்டாசுப் பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. வெடிவிபத்து காரணமாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை அதிர்வு உணரப்பட்டது.
தீ விரைவில் அருகிலுள்ள மற்ற அறைகளுக்கும் பரவியது. இதனால் 10க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாக விழுந்தன.தகவல் கிடைத்ததும் சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஒருவர் பலி:
இந்த விபத்தில் பனையடிபட்டியைச் சேர்ந்த பாலகுருசாமி (வயது 50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கண்ணன், ராஜபாண்டி, ராஜசேகர் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்த கமலேஷ் ராம், ராகேஷ் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் இரங்கல்:
இந்த விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையையும் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த திரு.பாலகுருசாமி (வயது 50) த/பெ.மூக்கையா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த திரு.கண்ணன் (வயது 50) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச் சேர்ந்த திரு.ராஜபாண்டி (வயது 37), சிவகாசி வட்டம், தாயில்பட்டி, பசும்பொன் நகரைச் சேர்ந்த திரு.ராஜசேகர் (வயது 29), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திரு.கமலேஷ் ராம் (வயது 28) மற்றும் திரு.ரமேஷ் (வயது 20) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
நிவாரண நிதி:
இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.






















