(Source: Poll of Polls)
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
’தன்னுடைய வியூகத்தால் தமிழ்நாட்டையே திருப்பி போட்டுவிடுகிறேன் என்று சவடால் விடுத்த ஆதவ் அர்ஜூனா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் சென்று கூட்டணிக்கு கெஞ்சியது ஏன்?’

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது ’குதிரை கொம்பு’ என்பதை உணர்ந்துள்ள ஆதவ் அர்ஜூனா, அட்லீஸ்ட், குறைந்த தொகுதிகளை கொண்ட புதுச்சேரியிலாவது கூட்டணி ஆட்சியை அமைக்கலாம் என்ற நினைப்பில், அங்கு சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு வருமாறு பல முறை கேட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன
பாஜக கூட்டணியில் இருந்து விலக வலியுறுத்தல்
வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டாம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளலாம் எனவும் அரசியலில் ’பழம் தின்று கொட்டை போட்டுள்ள’ ரங்கசாமிக்கே ஆதவ் அர்ஜூனா பாடம் எடுத்துள்ள நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் சிறுபிள்ளைத் தனமான பேச்சை கேட்டு, சிரித்தபடியே ’போய்ட்டு வாப்பா தம்பி’ என ரங்கசாமி அவரை திருப்பி அனுப்பியதாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்திக்க மறுக்கும் விஜய் ?
அதே நேரத்தில், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள விஜய், அவரை சந்திப்பதையே தவிர்த்து வருவதாகவும், தமிழ்நாட்டையே தன்னுடைய வியூகத்தால் புரட்டிப் போட்டுவிடுவேன் என்று சவடால் விடுத்த ஆதவ் அர்ஜூனா, இதுவரை பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை என்பதை விஜய் உணர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
பாஜக கோபம் – விஜய் மீது ரெய்டு ?
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிராக த.வெ.க. செயல்படுவதால், விஜய், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை இங்கு பாஜக அட்டாக் செய்யாமல் மவுனம் காத்து வருகிறது. அதே நேரத்தில், தென் இந்தியாவில், புதுச்சேரியில் மட்டுமே பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால், அங்கு சென்று பாஜக கூட்டணியை பிரிக்க ஆதவ் அர்ஜூனா முயற்சித்த விவரம் அறிந்து பாஜக மேலிடம் கடும் கோபம் அடைந்துள்ளதாகவும், ஆதவ் அர்ஜூனாவின் இதுபோன்ற நடவடிக்கைகளால் விஜய் மீது பாஜகவின் கோபம் திரும்பி, மீண்டும் அவர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தினால் விஜயின் கதி என்ன ஆகும் என கவலையில் ஆழ்ந்துள்ளனர் த.வெ.க. நிர்வாகிகள்.
உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டம், மாநாடு அதை விட்டால் பாத யாத்திரை, சுற்றுப் பயணம் இவற்றை மட்டும் தெரிந்துக்கொண்டு தன்னை பிரசாந்த் கிஷோரை விட பெரிய வியூக வகுப்பாளராக நினைத்துக்கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகள் த.வெ.க.விற்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், தொடக்கத்தில் அதிமுக, த.வெ.க.வை தேடி வரும் என்று கூறிக்கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் அதிமுகவிற்கு எதிராக பேசத் தொடங்கியதே அதற்கு சான்று என்றும் த.வெ.க. நிர்வாகிகள் கருதி, பேசி வருகின்றனர்.





















