Nainar Nagendran: “யாருக்கும் என்ன தெரியல.. வணக்கம் கூட சொல்றதில்ல” புலம்பிய நயினார்.. ஷாக்கில் தொண்டர்கள்
தன்னை யார் என்றே தெரியவில்லை என பாஜக நிர்வாகிகளே கூறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

செல்போனில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் நம்முடைய கட்சியில் பாதி பேர் வணக்கம் கூட சொல்வதில்லை என பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் வேதனையுடன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பாஜக சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “ 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக நாம் வெற்றி மாலை சூடுவோம், முருகர் பக்தர் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது. தமிழகத்தில் தினம்தோறும் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. திமுக ஆட்சியை பொறுப்பேற்ற பிறகு இதுவரை 24 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது. திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு சார்பில் அவரது தம்பிக்கு 80-கிலோ மீட்டர் தள்ளி வேலை வாய்ப்பு கொடுத்துள்ளனர். மேலும் 4-கிலோ மீட்டர் தள்ளி இடம் கொடுத்துள்ளனர். சென்னையில் கொக்கைன் சாதாரணமாக கிடைக்கிறது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என் டி ஏ கோட்டைக்கு வரவேண்டும்”என்று கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “ செல்போனில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் நம்முடைய கட்சியில் பாதி பேர் வணக்கம் கூட சொல்வதில்லை, எடுத்தவுடன் சொல்லுங்கள் என கூறுகின்றனர்” என்று கடுகடுத்துள்ளார்.
”வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு கொண்டால் என்னை தெரியவில்லை எனவே கூறுகிறார். கடலூரை சேர்ந்த பெண் நிர்வாகியை தொடர்பு கொண்ட நான் நயினார் நாகேந்திரன் என கூறிய போது அவர் என்னை அவர்களுடைய நைனா என நினைத்து விட்டார் போல என்னை ஒழுங்கா இருந்துக்கோ என கூறி போனை வைத்து விட்டார்” என வேதனை தெரிவித்தார்.
மேலும் கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேச வேண்டும் என அறிவுறுத்தினார். தன்னை யார் என்றே தெரியவில்லை என பாஜக நிர்வாகிகளே கூறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.






















