Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
சென்னை நங்கநல்லூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன், பறக்கும் ரயில் சேவை குறித்து ஒரு முக்கியமான அப்டேட்டை வழங்கினார். அது எந்த வழித்தடம் தெரியுமா.?

நங்கநல்லூரில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில்(MRTS) சேவை குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வழங்கினார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
“நவம்பரில் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை“
ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம், நங்கநல்லூரில் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ. அன்பரசன், அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் மக்களிடையே உரையாற்றிய அவர், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டப் பணிகள்(MRTS) அனைத்தும் வேகமாக நடைபெறுவதாக குறிப்பிட்டார். இதனால், பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாகவும், அதனால், பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவை நவம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவையை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் (MRTS)
சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரயில்(MRTS) இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக, வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணிகள், கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த விரிவாக்கத் திட்டம், 495 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட நிலையில், இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக, இத்திட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பு வந்த பிறகு, 2022-ல் திமுக ஆட்சி வந்ததும், பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 500 மீட்டர் தூரம் இணைக்கப்பட வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு, தூண்கள் அமைக்கப்பட்ட போது, அதன் மீது வைக்கப்பட்ட ‘கார்டிடார்‘ பாரம் தாங்காமல் கீழே விழுந்தது.
அதன் பின்னர், அதை தூக்கி நிறுத்தி மீண்டும் பலத்தின் மீது வைத்து சரி செய்யப்பட்டது. தற்போது, பரங்கிமலை ரயில் நிலையத்துடன் அந்த வழித்தடத்தை இணைக்கும் பணி முடிந்து விட்ட நிலையில், ஒருசில பணிகள் மட்டுமே மீதமுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், வேளச்சேரி - பரங்கிமலை இடையே பணிகள் வேகமாக நடைபெறுவதால், அது விரைவில் முடிவடைந்து, பறக்கும் ரயில் சேவை நிவம்பர் மாதம் தொடங்கும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இதனால், வேளச்சேரி, பரங்கிமலை மற்றும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















