பெரியகுளம் அருகே வைரஸ் காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு; பாதித்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்காதது, துப்புரவு பணிகளை மேற்கொள்ளாததால் சங்கரமூர்த்தி பட்டி கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு.
குடிநீர் சுகாதார சீர் கேட்டால் 10 வயது சிறுவன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் மேலும் ஐந்து சிறுவர்கள் மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாக்கடை கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு 22 சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஊராட்சி நிர்வாகம் முறையான குடிநீர் வழங்காதது, துப்புரவு பணிகளை மேற்கொள்ளாததால் சங்கரமூர்த்தி பட்டி கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கரமூர்த்திபட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ், ரம்யா தம்பதியரின் 10 வயது மகன் மோகித் குமார் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த எட்டு நாட்களாக சிறுவன் மோகித் குமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் உடல் சங்கரமூர்த்தி பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் தங்கள் கிராமத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் பைப் சாக்கடை நீர் செல்லும் வாய்க்காலில் பதிக்கப்பட்டுள்ளதால் பல நேரங்களில் சாக்கடை நீர் கலந்து வழங்கப்படும் நிலை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கும் கிராம மக்கள் தற்பொழுது சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கியது தான் என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் ஐந்து சிறுவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏற்கனவே 22 சிறுவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல்நலம் பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே கிராம மக்கள் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கி வரும் நிலையில் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்பொழுது ஒரு சிறுவன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டுவதோடு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை மருத்துவர் தெரிவிக்காத நிலையில் உயிர் இழப்புக்கு காரணம் என்ன என்பதனையும் சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் குடிநீர் தொட்டியில் உள்ள நீரை கிராம மக்கள் எடுத்து காண்பித்த பொழுது குடிநீர் முழுவதும் சுகாதார சீர்கேடுடன் இருப்பது தெரியவந்த நிலையில், தேவதானப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கோமதி அவர்களிடம் கேட்டபோது உயிரிழந்த சிறுவன் 'மோகித்குமார் வைரல் காய்ச்சலினால் இறந்ததாக' தெரிவித்தார்.