TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். அவர் கூறியது என்ன.? அதை விஜய் ஏற்பாரா.? பார்க்கலாம்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு சூசகமாக பதிலளித்துள்ளார். கூட்டணி குறித்து அவர் என்ன கூறினார்.? விஜய்யின் விருப்பம் என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தவெக கூட்டணி குறித்து பிரேமலதா என்ன கூறினார்.?
கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி உண்டா என்பது குறித்து நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும், அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
மேலும், 2026-ல் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான் என்றும், அப்போதுதான் தப்பு நடந்தால் ஒரு எதிர்க்கட்சியாக அதனை சுட்டிக்காட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து விஜய் தான் சொல்ல வேண்டும் என்று கூறியதன் மூலம், தவெக உடன் கூட்டணி அமைக்க பிரேமலதாவிற்கு விருப்பம் உள்ளது என்பது தெளிவாகிறது. அதைத் தான் இப்படி சூசகமாக பிரேமலதா கூறியுள்ளார். அதாவது, முடிவு விஜய்யின் கையில் என்பது தான் அது.
விஜய்யின் நிலைப்பாடு என்ன.?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டிற்கு குறைவாகவே உள்ள நிலையில், முன்னணி கட்சிகள் கூட்டணியை வேகமாக முடிவு செய்து வருகின்றன. ஆனால், தவெக நிதானமாகவே செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே, அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இரு தரப்புமே முதலமைச்சர் வேட்பாளர் தங்கள் பக்கம் தான் என்பதில் குறியாகவும், விட்டுக்கொடுக்காமலும் இருந்ததால், கூட்டணி அமையாமல் போனது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணி தான் ஒர்க் அவுட் ஆகும் என்பதால், விஜய் சற்று யோசிக்கத் தொடங்கிய நேரத்தில், அதிமுக உடன் பாஜக இணைந்து விட்டது. இதனால், தவெக, அதிமுக உடன் இணைவது பெரும் கேள்விக் குறியானது. ஏனென்றால், பாஜகவும் தங்களுக்கு எதிரி என்று ஏற்கனவே விஜய் கூறியது தான்.
அதன் பிறகு, கூட்டணியே வேண்டாம், தனியாகவே தேர்தலை சந்திப்போம் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா போன்றோர் தவெக-வில் இணைந்ததால், கூட்டணி குறித்து அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கூட்டணி அமைக்காமல் இருக்கும் முக்கிய கட்சிகள் பாமக-வும், தேமுதிக-வும் தான். இதனால், அவர்களுடன் கூட்டணி அமைக்கலாமா என்பதே தவெக-வின் யோசனையாக இருக்கும். ஏனென்றால், அதிமுக உடன் இணையலாம் என்றால், அங்கு பாஜக உள்ளது. திமுக பக்கம் போகவே முடியாது. அதனால், இந்த கட்சிகள் தவிர வேறு வாய்ப்புகளே தவெக-விற்கு இல்லை.
இந்த நிலையில் தான், தற்போது பிரேமலதா தனது விருப்பத்தை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி தவெக கூட்டணி அமைக்கப் போகிறதா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.
தனித்தே போட்டி என்பதில் விஜய் உறுதியோடு இருக்கப் போகிறாரா.? அல்லது, வரும் வாய்ப்பை பயன்படுத்தி கூட்டணி அமைக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





















