AXIOM-4 Mission : என்ன ஆச்சு..! இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு, மீண்டும் எப்போது?
AXIOM-4 Mission : இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

AXIOM-4 Mission: இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர், இன்று விண்வெளி பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.
விண்வெளி பயணம் ஒத்திவைப்பு:
இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரை, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் AXIOM-4 திட்டம், மோசமான வானிலை காரணமாக நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அடங்கிய குழுவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் திட்டமானது, மோசமான வானிலை காரணமாக இன்றைக்கு (ஜுன்.10) இல்லாமல் நாளைக்கு (ஜுன்.11) செயல்படுத்தப்பட உள்ளது. இந்திய நேரப்படி நாலை மாலை 5.30 மணிக்கு AXIOM-4 திட்டத்திற்கான ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஃபால்கன் 9 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
14 நாள் பயணம்
AXIOM-4 திட்டத்தில் கமாண்டர் பெக்கி விட்ஸன்,பைலட் சுக்லா, விண்வெளி பயணத்தில் கைதேர்ந்த நபர்களான ஹங்கேரியைச் சேர்ந்த டைகோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னன்ஸ்கி ஆகியோர் அடங்கியுள்ளனர். இவர்கள் மேற்கொள்ள இருக்கும் 14 நாள் பயணமானது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக மீண்டும் தரையிறக்குவது குறித்த இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளினாராய்ச்சி பயனளிக்கும்.
யார் இந்த சுபான்ஷு?
1984 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட ராகேஷ் சர்மாவை தொடர்ந்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியர் என்ற பெருமை சுபான்ஷுவையே சேரும். 'ஷுக்ஸ்' என்ற கோட் நேமால் அழைக்கப்படும் லக்னோவில் பிறந்த சுக்லா, இஸ்ரோ-நாசா ஆதரவுடன் இயங்கும் ஆக்ஸியம் ஸ்பேஸின் வணிக விண்வெளிப் பயண குழுவின் ஒரு அங்கமாக உள்ளார். இதில் உள்ள அனைவருமே அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களாவார்.
லக்னோவில், சுக்லாவின் விண்வெளிப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், அவரது சிட்டி மான்டேசரி பள்ளி (CMS) ஒரு பொதுக் கண்காணிப்பு விருந்தை திட்டமிட்டுள்ளது. அவரது விண்வெளிப் பயணத்திற்கு 'சுக்ஸ்'-ஐ வாழ்த்தி நகரம் முழுவதும் பல விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. "ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதலை நாசா/ஆக்ஸியம் வர்ணனையுடன் நேரடியாக ஒளிபரப்ப CMS பிரமாண்டமான திரைகளை அமைத்துள்ளது.
விண்வெளி திட்டம்:
ஐ.எஸ்.எஸ்ஸில் 14 நாட்கள் தங்கியிருக்கும் போது, ஆக்ஸ்-4 குழுவினர் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்கள் மற்றும் விண்வெளித் துறைத் தலைவர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) ஆகியவற்றின் ஒத்துழைப்பின் கீழ், நாசாவின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட பிரத்யேக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான பரிசோதனைகளை சுக்லா மேற்கொள்ள உள்ளார். ஆக்சியம் மிஷன் 4 இல் சுக்லாவின் அனுபவம், 2027 இல் திட்டமிடப்பட்டுள்ள ககன்யான் திட்டத்தில் மிகவும் முக்கிய பங்காற்ற உள்ளது. ஆக்சியம்-4 பணிக்காக இஸ்ரோ ரூ.550 கோடியை செலவிடுவது குறிப்பிடத்தக்கது.





















